வேறு பாடசாலைக்கு இடமாற்றம் கிடைத்ததை தொடர்ந்து, 5 வருடங்களாக கடமையாற்றிய பாடசாலையில் பிரியாவிடை நிகழ்வில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது ஆசிரியை ஒருவரும் அவரது கணவரும் வாகன விபத்தில் உயிரிழந்த சம்பவம் ஒன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
மாகந்துர பிரதேசத்தைச் சேர்ந்த இருவரே உயிரிழந்துள்ளனர்.
பிடபெத்தர மெதேரிபிடிய பாடசாலையில் சுமார் 5 வருடங்களாக கடமையாற்றும் ஆசிரியை ஒருவர் வேறு பாடசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டமையினால் இடம்பெற்ற வைபவம் முடிந்து தனது கணவருடன் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போது அக்குரஸ்ஸ, சியம்பலாகொட, பிடபெத்த வீதியில் வைத்து விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள், சொகுசு வேன் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதன்போது, அப்பகுதி மக்கள் காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கு சுமார் 20 நிமிடங்கள் எடுத்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அக்குரஸ்ஸ வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட போதிலும் அவர்களது உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
28 வயதான பாக்யா பொரலெஸ்ஸ மற்றும் அவரது கணவர் இந்திக்க சம்பத் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வேனை ஓட்டிச் சென்ற வர்த்தகர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் குடிபோதையில் இருந்தாரா என்பது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.