உணவு கேட்டு தொந்தரவு செய்த 18 மாத மகளை அடித்துக் கொன்றதாகக் கூறப்படும் 21 வயது தாய் ஒருவர் நேற்று முன்தினம் (24) கலஹா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை மூச்சுத்திணறடித்துக் கொன்ற 21 வயதான இந்த தாய், குழந்தையின் சடலத்தை வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து மூன்று மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் கலஹா கஸ்துருவத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் உயிரிழந்தவர் நிகும் செஹன்சா என்ற குழந்தை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் (24) பிற்பகல் குழந்தை உணவு கேட்டு தொந்தரவு செய்த போது தாக்குதலுக்கு உள்ளாகிய குழந்தையை, மயங்கி வீழ்ந்ததாகக் கூறி தாய் குழந்தையை கலஹா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.
வைத்தியர்கள் நடத்திய விசாரணையில், ஒருமுறை சாப்பாடு கொடுத்துவிட்டு, மீண்டும் உணவு கேட்ட குழந்தையை தள்ளிவிட்டதாக கூறினார்.
குலதுங்க முடியசெல என்பவரை மணந்த லக்சிகா என்ற 21 வயதுடைய இந்த தாயார், ஹொரண பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.
இவர்கள் இருவரும் பதினான்கு வயதிலிருந்தே காதலித்து மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டதாகவும், கணவர் வெளியிடங்களில் வேலை செய்து வருவதாகவும், அந்த பெண் ரிக்ரொக் மூலம் இளைஞன் ஒருவருடன் காதல் உறவிலிருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த காதல், கணவனுக்கு தெரிய வந்ததும், குடும்பத்துக்குள் தகராறு எழுந்துள்ளது. ரிக்ரொக் காதலனுடனேயே சென்றுவிடுமாறு, தனது மனைவியிம் கூறியுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்க ஹொரணையிலிருந்து வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியதாகவும் கணவர் தெரிவித்துள்ளார்.
தனது குழந்தையை கவனிப்பதை விட கையடக்கத் தொலைபேசியைப் பார்க்கும் பழக்கமே மனைவியிடம் அதிகமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.
இரண்டாவது முறையாக குழந்தை உணவு கேட்டபோது, தொலைபேசியில் மூழ்கியிருந்த தாய் ஆத்திரமடைந்து, குழந்தையின் வாய் மற்றும் மூக்கை நீண்ட நேரம் அழுத்தி, குழந்தையை தரையில் வீசியதாக விசாரணையில் அந்தப் பெண் பொலிசாரிடம் கூறினார்.
கலஹா பொலிசார் தாயை கைது செய்துள்ளதுடன், குழந்தையின் கடைசி தருணங்களை அவர் பதிவு செய்த கையடக்கத் தொலைபேசியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.
தரையில் வீசப்பட்ட குழந்தை எழுந்து, சில அடிகள் நடந்து தரையில் வீழ்ந்து உயிரிழந்த காட்சிகளும் தொலைபேசியில் பதிவாகியுள்ளது.