எதிர்வரும் பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிடுவதென ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. எனினும், தேர்தல் நடவடிக்கைகளில் பங்கேற்பதா என்பதை தீர்மானிக்க தமக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்குமாறு சிவில் சமூகமென்ற பெயரில் தனிநபர்களாக இயங்கும் யாழ்ப்பாண கட்டுரையாளர்கள் கேட்டுள்ளனர்.
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும், யாழ்ப்பாண கட்டுரையாளர்களுக்குமிடையில் இன்று (26) கலந்துரையாடல் நடந்தது.
நேற்று இந்த கலந்துரையாடல் ஏற்பாடாகியிருந்தது. கலந்துரையாடலுக்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சென்றிருந்தனர். எனினும், கட்டுரையாளர்கள் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றிருக்கவில்லை.
இன்று கலந்துரையாடலுக்கு வருவதாக கூறியிருந்தனர்.
இன்றைய கலந்துரையாடலில், எதிர்வரும் பொதுத்தேர்தலில் சங்கு சின்னத்தில் தாம் போட்டியிடுவதாக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் குறிப்பிட்டனர். இதில் கட்டுரையாளர்களுக்கு ஆட்சேபனையிருக்கவில்லை.
எனினும், பொதுத்தேர்தலில் போட்டியிடுவது, பிரச்சாரத்தில் ஈடுபடுவது உள்ளிட்ட ஏதாவதொரு நடவடிக்கையை மேற்கொள்வதா என இதுவரை தீர்மானிக்கவில்லையென்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளருக்கு எதிர்பார்த்த வாக்கு கிடைக்காத ஏமாற்றத்தினால், பொதுக்கட்டமைப்பு என செயற்பட்ட கட்டுரையாளர்கள், தற்போது தேர்தலில் களமிறங்க தயங்குகின்றனர்.
தேர்தல் நடவடிக்கைகளில் ஏதாவதொன்றில் ஈடுபடுவதா என்பதை தீர்மானிக்க தமக்கு 2 நாட்கள் அவகாசம் தேவையென கட்டுரையாளர்கள் குறிப்பிட்டனர்.
இந்த நாட்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது தேர்தல் ஏற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.