ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடாளுமன்றத்தை கலைத்துள்ளார். நவம்பர் 14ஆம் திகதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் ஒக்டோபர் 11 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும். புதிய பாராளுமன்றம் நவம்பர் 21 ஆம் திகதி கூடவுள்ளது.
பாராளுமன்றத்தை கலைப்பதற்கான ஜனாதிபதியின் தீர்மானத்தை அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் அரச அச்சகத்தினால் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அரசியலமைப்பின் 70 வது சரத்தின் மூலம் அவருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் மற்றும் 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல்கள் சட்டத்தின் 10 வது பிரிவின் விதிகளின் படி ஜனாதிபதி பாராளுமன்றத்தை கலைத்தார்.
2020 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 5 ஆம் திகதி நடைபெற்ற 2020 நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளால் இலங்கையின் தற்போதைய நாடாளுமன்றத்தின் உறுப்புரிமை தீர்மானிக்கப்பட்டது.
இலங்கையின் அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் அதிகபட்ச சட்டமன்றக் காலம் முதல் கூட்டத்திலிருந்து 5 ஆண்டுகள் ஆகும்.
இருப்பினும், மே 2022 க்குள், நாடு வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டது, இது அரசியல் மற்றும் சமூக அமைதியின்மைக்கு வழிவகுத்தது. ஜனதிபதியும், அரசும் பதவிவிலக வேண்டுமென வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மே 9, 2022 அன்று அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2022 மே 12 அன்று ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமித்தார்.
ஜூலை 2022 இல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டைவிட்டு தப்பியேடினார்.
அதைத் தொடர்ந்து, விக்கிரமசிங்க தற்காலிக ஜனாதிபதியானார். பின்னர் 20 ஜூலை 2022 அன்று பாராளுமன்றத்தால் இலங்கையின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தற்போதைய பாராளுமன்றம் மக்கள் அங்கீகாரத்தை இழந்து விட்டது என மக்கள் கூறிய போதும், பொதுஜன பெரமுனவை பெரும்பான்மையாக கொண்ட பாராளுமன்ற அஙகத்தவர்கள் தேர்தலை தவிர்த்தனர். அவர்களால் ஆட்சிக்கு கொண்டு வரப்பட்ட ரணில், உள்ளூராட்சி தேர்தலையும் தவிர்த்தார்.
நடந்து முடிந்த ஜனதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, ஆட்சிக்கு வந்தால் பாராளுமன்றததை கலைப்பதாக அனுர, சஜித் அறிவித்திருந்தனர். ஆனால், தான் ஆட்சிக்கு வந்தால் பாராளுமன்றத்தை கலைக்கமாட்டேன் என ரணில் வழங்கிய வாக்குறுதியையடுத்து, தற்போது தேர்தலை முகம் கொடுக்க முடியாமலிருந்த பெரும்பான்மை பெரமுன மற்றும் கூட்டணியினர் ரணிலை ஆதரித்தனர். வடக்கில் டக்ளஸ், கிழக்கில் பிள்ளையான் குழுவினர் ரணிலை ஆதரித்தனர்.
எனினும், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆணை தெளிவாக வழங்கப்பட்டது. இதில் தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். செப்டம்பர் 21 மற்றும் அவர் திங்கட்கிழமை (23) ஜனாதிபதியாக பதவியேற்றார்.