இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 9 ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்வதற்கான தேர்தலுக்கான தேர்தல் இன்று (21) இடம்பெறுகின்றது.
நாடுமுழுவதும் காலை 7 மணிமுதல் வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை பதிவு செய்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமையப்பெற்றுள்ள வாக்குச் சாவடிக்கு இன்று காலை 9.30 மணியளவில் தனது தம்பியுடன் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா தனது வாக்கை செலுத்தியிருந்தார்.
வாக்களித்த பின் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து தெரிவித்த டக்ளஸ், தற்போதைய ஜனாதிபதி ரணில் தரப்பினர் மேற்கொள்ளும் போலிப் பிரச்சாரத்தையே முன்னெடுத்தார்.
“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் இந்த ஆட்சி தொடர வேண்டும். அப்போதுதான் கடந்த இரண்டு வருட வளர்ச்சியைத் தொடர்ச்சியாக முன்கொண்டு செல்ல முடியும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நாடு மிகப்பெரும் பொருளாதார வீழ்ச்சியை கண்டிருந்தது. அப்போது எவரும் நாட்டை பொறுப்பேற்க முன்வராத நிலையில் தற்துணிவுடன் பொறுப்பேற்று நாடு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.
அதனால் அவரது வெற்றி இம்முறை நாட்டுக்கு அவசியமாகின்றது. நாட்டு மக்களும் அவரை வெற்றியடையச் செய்ய அணிதிரண்டு வாக்களித்து வருகின்றனர்“ என்றார்.