“யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என டாக்டர்.காந்தராஜ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், “தனியார் தொலைக்காட்சியில் திரைப்பட நடிகைகள் குறித்து நான் கொடுத்த பேட்டி பல நடிகையர் மனதைப் புண்படுத்தி இருக்கிறது என்பதை அறிகிறேன். யாரையும் காயப்படுத்த வேண்டும் என்பது என் நோக்கமல்ல. இருப்பினும் இந்தப் பேட்டி கொடுத்தற்காக வருத்தம் தெரிவிக்கிறேன். உளப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக நடிகை ரோகிணி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், “செப்டம்பர் 7-ம் தேதி யூடியூப் சேனல் ஒன்றில் வீடியோ ஒன்று பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. அந்த வீடியோவில் பேசியுள்ள டாக்டர் காந்தராஜ், நடிகைகளை ஒட்டுமொத்தமாக கீழ்தரமாக பேசியதோடு அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளர்கள் என்று பேசியுள்ளதைக் கண்டு மிகவும் அதிர்ச்சியடைந்தோம்.
இதில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் டாக்டர்.காந்தராஜ் பேட்டி அளித்துள்ளார். மேடை நாகரிகமோ அல்லது சமூக பொறுப்போ இல்லாமல் தனக்கு தோன்றியவற்றை எல்லாம் பேசியிருக்கிறார். அனைத்து நடிகைகளையும் கொச்சைப்படுத்தி பேசியுள்ளது தண்டனைக்குரிய குற்றச் செயலாகும். எனவே டாக்டர் காந்தராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காந்தராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.