மன்னாரில் நேற்று (17) இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மன்னார் தாழ்வுபாடு பகுதியில் உள்ள இலங்கை தமிழ் அரசு கட்சியின், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்தார். .
சட்டத்தரணி தினேஷ், முன்னாள் தவிசாளர்கள், மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்காக தம்மை அர்ப்பணிப்பதாக ஜனாதிபதியிடம் உறுதியளித்ததாக, ஐ.தே.க வட்டரங்கள் தெரிவித்தன.
சாள்ஸ் நிர்மலநாதன், சி.சிறிதரன் ஆகியோர் ரணில் விக்கிரமசிங்க மூலமாக வர்த்தக அனுகூலத்தை பெற்றுள்ளதாக சில காலமாக அரசியல் வட்டாரங்களில் பேச்சடிபட்டு வந்தது. இலங்கை தமிழ் அரசு கட்சி, ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்க முடிவெடுத்த போதும், இருவரும் அதற்கு கட்டுப்படவில்லை. சாள்ஸ் நிர்மலநாதன் நேரடியாக ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கிறார். ரணிலின் பின்னணியில் களமிறக்கப்பட்டதாக கருதப்படும் தமிழ் பொதுவேட்பாளரை சிறிதரன் ஆதரிக்கிறார்.
இதேவேளை, தமிழ்அரசு கட்சியின் சசிகலா ரவிராஜ், அவரது மருமகன் கலையமுதன் ஆகியோர் ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை யாழ்ப்பாணம் ஜெட் விங் ஹோட்டலில் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இக்கலந்துரையாடலை கலையமுதன் ஏற்பாடு செய்திருந்தார்.
அத்துடன், ரணில் விக்கிரமசிங்கவுக்கும் தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் அவரது இல்லத்தில் இடம்பெற்றது.