துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை சந்தித்து, டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். இதையடுத்து, ஆட்சி அமைக்க ஆளுநரிடம் ஆதிஷி உரிமை கோரினார்.
டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவை இன்று பிற்பகல் அரவிந்த் கேஜ்ரிவால் சந்தித்தார். அப்போது, அவர் தனது ராஜினாமா கடிதத்தை துணைநிலை ஆளுநரிடம் சமர்ப்பித்தார். இதனையடுத்து, கேஜ்ரிவாலுடன் சென்ற ஆதிஷி, ஆட்சி அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரினார். அப்போது, ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை அவர் துணைநிலை ஆளுநரிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆதிஷி, “அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்த முடிவு உலக ஜனநாயக வரலாற்றில் குறிப்பிடத்தக்கது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு அவருக்கு போதுமானது அல்ல; டெல்லி மக்களின் தீர்ப்பை அறிய அவர் விரும்புகிறார். தான் நேர்மையானவர் என்று பொதுமக்கள் கூறினால்தான் முதல்வர் நாற்காலியில் அமருவேன் என்று அவர் கூறியுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் தனது பதவியை ராஜினாமா செய்தது வருத்தம் அளிக்கிறது. அவரை மீண்டும் முதல்வராகக் கொண்டுவர பாடுபடுவேன்.
ஆம் ஆத்மி போன்ற ஒரு கட்சியால் மட்டுமே தன்னைப் போன்ற முதல் முறை அரசியல்வாதிக்கு இத்தகைய பொறுப்புகளை வழங்க முடியும். நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனாலும் எனது மூத்த சகோதரர் இன்று ராஜினாமா செய்வதில் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். டெல்லி முதல்வர் பதவியில் இருந்து கெஜ்ரிவால் ராஜினாமா செய்வது ஒரு சோகமான தருணம். எனவே, எனக்கு மாலை அணிவிக்கவோ அல்லது வாழ்த்தவோ வேண்டாம். அரவிந்த் கேஜ்ரிவாலின் வழிகாட்டுதலின் கீழ் முதல்வராக பணியாற்றி டெல்லி மக்களை பாதுகாப்பேன். கேஜ்ரிவால் என்னை நம்பி, என்னை எம்.எல்.ஏ.வாகவும், பின்னர் அமைச்சராகவும், இப்போது முதல்வராகவும் ஆக்கினார். அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சியின் ஷீலா தீட்சித், பாஜகவின் சுஷ்மா ஸ்வராஜ் ஆகியோருக்குப் பிறகு டெல்லியின் மூன்றாவது பெண் முதல்வராக ஆதிஷி பதவி ஏற்க உள்ளார். தற்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நாட்டின் ஒரே முதல்வராக உள்ள நிலையில், ஆதிஷியின் பதவி ஏற்புக்குப் பின் இந்த எண்ணிக்கை இரண்டாக அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி திஹார் சிறையில் இருந்த கேஜ்ரிவால் கடந்த 13-ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். இதையடுத்து ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் நேற்று முன்தினம் பேசும்போது, “முதல்வர் பதவியை 2 நாட்களில் ராஜினாமா செய்வேன். மக்கள் எனக்கு மீண்டும் வாக்களித்த பிறகு மீண்டும் அப்பதவியில் அமர்வேன்” என்றார். டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த 5 மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கேஜ்ரிவால் இவ்வாறு அறிவித்தார். அதன்படி இன்று அவர் பதவியை ராஜினாமா செய்தார்.