27.1 C
Jaffna
December 13, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

தமிழ் மக்கள் புத்திசாலித்தனத்துடன் வாக்களிக்க வேண்டும்: யாழ் பல்கலைகழக ஆசிரியர்கள் கூட்டறிக்கை!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலினை ஒட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் ஒன்றிணைந்த அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இதில், தமிழ் மக்கள் தேர்தலில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையின் முழு வடிவம் வருமாறு-

2024 ஜனாதிபதித் தேர்தலும் சிறுபான்மையின மக்களும்

எதிர்வரும் செப்டெம்பர் 21 ஆம் திகதி இலங்கை தனது ஒன்பதாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியினைத் தெரிவு செய்வதற்கான தேர்தலிலே வாக்களிக்கவுள்ளது. 2022 ஆம் ஆண்டு நாட்டிலே ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் அதனையொட்டி எழுச்சி பெற்ற மக்கள் போராட்டங்கள் என்பவற்றின் பின்னர் நாடு சந்திக்கும் முதலாவது மிகவும் முக்கியமான தேர்தல் இதுவாகும்.

கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிப்போய் இருக்கும் இந்த நாட்டில் வாழ்க்கைச் செலவு கடந்த இரு வருடங்களிலே பல மடங்கு அதிகரித்துள்ளது; வறுமையும், வேலையின்மையும் மக்களை வாட்டுகிறது; உரம் மற்றும் மண்ணெய் போன்றவற்றிற்கான மானியக் குறைப்பின் காரணமாக விவசாயிகள், மீனவர்களின் வாழ்வாதாரங்கள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன; வட்டி வீத அதிகரிப்பு சிறிய வியாபரிகள் வருவாயில் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது; கட்டடத் துறையில் ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சி காரணமாக நகர்ப்புற முறைசாரா மற்றும் கிராமப் புற மக்களின் தொழில்வாய்ப்புக்கள் குறைந்துள்ளன; வாழ்க்கைச் செலவு அதிகரிப்பினால் புடைவைக் கைத்தொழிலிலும், பெருந்தோட்டங்களிலும் வேலை செய்யும் பெண்களின் மெய் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளது; போக்குவரத்து, எரிபொருள், மின்கட்டணங்களின் அதிகரிப்பினால் ஆசிரியர்கள் உள்ளடங்கலான அரச துறையில் பணி புரிவோர் மோசமான பாதிப்புக்களை எதிர்கொள்ளுகிறார்கள். அரச செலவு குறைக்கப்பட்டிருப்பதால் இலவசக் கல்வி, இலவச சுகாதாரத் துறைகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன. அதிகளவான மக்கள், குறிப்பாக இளைஞர்கள், வேலைவாய்ப்புக்களைத் தேடி வேறு நாடுகளுக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த நிலைமைகளை நாம் தமிழ் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டின் வடக்குக் கிழக்குப் பகுதிகளிலும் அவதானிக்கிறோம். போதைப் பொருள் பாவனையின் அதிகரிப்பு, இளைஞர்களிடையே அதிகரிக்கும் ஆயுதக்  கலாசாரம் மற்றும் வன்முறை, இந்திய இழுவைப் படகுப் பிரச்சினை போன்றன வடக்கினை மேலதிகமாகப் பாதிக்கும் விடயங்களாக அமைகின்றன.

நிலைமை இவ்வாறு மோசமடைந்து செல்லுகையிலே நாட்டினைப் பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளிய அரசியல்வாதிகளிலே பலர் தொடர்ந்தும் அமைச்சர்களாக இருக்கிறார்கள். ஊழலிலே ஈடுபட்டு நாட்டின் வளங்களையும் செல்வத்தினையும் கொள்ளையிட்டவர்கள் இன்றும் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். தற்போதைய ஆட்சியாளர்கள் மிகவும் மோசமான முறையில் இந்த நாட்டினைக் கடந்த ஐந்து ஆண்டுகளிலே ஆட்சி செய்திருக்கிறார்கள். மக்கள் இந்த நிலைமைகளினால் மிகவும் அதிருப்தியுற்றிருக்கிறார்கள்.

இவ்வாறானதொரு நிலையிலேயே 2022 இல் இடம்பெற்ற மக்கள் எழுச்சியின் மையமாக இருந்த ‘கட்டமைப்பு மாற்றம் வேண்டும்’ (System Change) என்ற கோசம் தற்போதைய தேர்தற் காலத்திலே நாட்டிலே, குறிப்பாகத் தென்னிலங்கையிலே, ஓங்கி ஒலிப்பதனை நாம் ஒவ்வொரு நாளும் காண்கிறோம். போராட்ட‌த்தின் மூலம் ஏற்படாத மாற்றங்களைத் தேர்தலின் மூலமாவது ஏற்படுத்த வேண்டும் என்பதிலே தெற்கில் இருக்கும் மக்கள் ஆர்வமாக இருப்பதனை உணரக் கூடியதாக உள்ளது.

இவ்வாறானதொரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலினை வடக்குக் கிழக்கிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வாழும் சிறுபான்மை மக்கள் கவனமாகவும், புத்திசாலித்தனத்துடனும் கையாள வேண்டியது அவசியம். தென்னிலங்கையிலே பல தசாப்தங்களுக்குப் பின்னர் இனவாதத்தினை முன்னிறுத்தாத தேர்தற் பிரசாரத்தினைப் பிரதான வேட்பாளர்கள் முன்னெடுப்பதாக நாம் அறிகிறோம். மக்களின் நலனினை முன்னிறுத்தும் பொருளாதார ரீதியான மாற்றங்கள், ஆட்சி முறையில் மாற்றம், ஊழல் ஒழிப்புப் போன்ற கோசங்களினை முன்வைக்கும் வேட்பாளர்களின் பின்னால் தென்னிலங்கை மக்கள் பெருமளவிலே திரளுவதனை நாம் தேர்தற் கூட்டங்களிலே காண்கிறோம்.

தமிழ், முஸ்லிம், மலையகத் தமிழ் மக்கள் இந்த சந்தர்ப்பத்தினைப் பயன்படுத்தித் தென்னிலங்கையில் மாற்றத்துக்காக எழுச்சி பெற்றிருக்கும் மக்களுடன் இந்தத் தேர்தலிலே பயணிப்பது குறித்து ஆராய வேண்டும். அதேநேரம் நாட்டினைக் கடந்த ஐந்து ஆண்டுகளிலே மோசமான நிலைக்குத் தள்ளியோரினைத் தோற்கடிப்பதுவும் அவசியம்.

இனப்பிரச்சினைத் தீர்வு, மதச்சார்பற்ற அரசினை உருவாக்குதல், போர்க்குற்றங்களை விசாரித்தல் போன்ற விடயங்களிலே பிரதானமான வேட்பாளர்கள் முற்போக்கான நிலைப்பாடுகளை எடுக்காமை குறித்து நாம் சுட்டிக்காட்ட வேண்டிய அதேவேளை, பொருளாதார நெருக்கடியும், ஊழலினால் ஏற்படும் பொருளாதார, அரசியற் சீர்கேடுகளும் சிறுபான்மை சமூகங்களையும் மோசமாகப் பாதித்துள்ளன என்பது குறித்து நாம் விழிப்புணர்வுடன் இந்தத் தேர்தலிலே செயலாற்றுவது அவசியம். இனத்துவ ரீதியாக மாத்திரமல்லாது, வர்க்க ரீதியாகவும், சாதிய ரீதியாகவும், பால்நிலை ரீதியாகவும் அரசின் அடக்குமுறை எவ்வாறு எம்மைப் பாதிக்கிறது என்பது பற்றி சிந்திப்பது அவசியம். நாம் எமது ஜனாதிபதித் தெரிவினை மேற்கொள்ளுகையிலே தனியே இனப்பிரச்சினை மற்றும் அதற்கான தீர்வுகளுக்குள் மாத்திரம் குறுக்கிவிடாது, நாட்டின் ஒட்டுமொத்த அரசியல் பொருளாதார சூழ்நிலை குறித்தும் பகுத்து ஆராய்வது அவசியம். அவ்வாறு செய்வதன் மூலம் நாட்டின் பிரதான அரசியல் நீரோட்டத்தில் இருந்து எம்மை நாமே புறமொதுக்காது இருப்பதனை உறுதி செய்யலாம். நாம் தனிமைப்படுத்தப்படாது, எமது அரசியல் உரிமைகளுக்கான போராட்டங்களைத் தென்னிலங்கை மக்களுடன் சேர்ந்து எதிர்காலத்திலே வென்றெடுப்பதற்கான சந்தர்ப்பங்களை உருவாக்குவது குறித்து இந்தத் தேர்தற் காலத்திலே சிந்திக்க வேண்டும்.

சர்வதேசத்தினால் தான் எமக்கு அரசியற் தீர்வு கிடைக்கும் என்ற அதீத நம்பிக்கை குறித்தும் நாம் விழிப்புடன் இருப்பது அவசியம். இன்றுள்ள சூழலிலே அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மாத்திரம் நாம் எமது தேர்தற் தெரிவுகளை வெளிப்படுத்துவது அரசியல் ரீதியாக உண்ணாட்டிலே எம்மை மேலும் பலவீனப்படுத்தக் கூடும். பொருளாதார நெருக்கடியின் காரணமாக அதிக எண்ணிக்கையிலே எமது இளைஞர்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலையினை நாம் முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமாயின், எமது சமூகங்களிலே பொருளாதார ரீதியில் நலிவுற்ற மக்களின் வாழ்க்கையிலே மாற்றங்களை உருவாக்கக் கூடிய வகையிலே நாம் தேர்தல்களிலே வாக்களிப்பது பற்றி சிந்திக்க முற்பட வேண்டும்.

இவ்வாறான‌ காரணங்களினால் தமிழ்த் தேசிய அரசியலினை மாத்திரம் முன்னிறுத்தி, சர்வதேச கவனத்தினை ஈர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு தேர்தலிலே வாக்குக் கோருவதும், தமிழ்த் தேசிய அடிப்படையிலே தேர்தலினைப் புறக்கணிப்பதுவும் அரசியல் ரீதியில் தமிழ் மக்களுக்குப் பின்னடைவினை ஏற்படுத்தக் கூடும். பொருளாதார ரீதியிலே மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் எமது சமூகங்களும், ஊழல் மற்றும் ஏனைய சீர்கேடுகளினால் பாதிக்கப்பட்டுள்ள எமது பொது நிறுவனங்களும் முன்னேறுவதற்கு இந்தத் தேர்தல்கள் ஏதாவது வழியில் சந்தர்ப்பங்களைத் திறக்குமா என நாம் சிந்திப்பது அவசியம். இதன் மூலம் எமது பொருளாதார நிலையிலும் நாம் முன்னேறங்களைக் கொண்டு வர முடியும். தென்னிலங்கையில் இனவாதம் சற்று அடங்கி இருக்கும் இந்த வேளையிலே, ஒட்டுமொத்த இலங்கையிலும் ஜனநாயகத் தன்மை மிக்க, இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தினை வலியுறுத்தும், அரசியல் மாற்றம் ஏற்படுவதற்கான ஒரு வாய்ப்பாக நாம் இந்தத் தேர்தலினை நோக்குவது பொருத்தமாக இருக்கும் என நாம் கருதுகிறோம்.

இந்த அடிப்படையிலே தற்போதைய ஆட்சியாளர்களை நிராகரித்து, முற்போக்கானதும், ஊழலுக்கு எதிரானதும், நாட்டினதும் மக்களினதும் பொருளாதார மீட்சியிலே அக்கறை கொண்டதும், 2022 இல் இடம்பெற்ற‌ மக்கள் போராட்டத்தின் போது எழுச்சியுற்ற‌ முற்போக்கான அரசியற் பொருளாதார மாற்றங்களுக்கான கோசங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கக் கூடியதும், நம்பகத்தன்மை மிக்கதும், சட்டத்தின் ஆட்சியினையும், நீதித் துறையின் சுதந்திரத்தினையும் உறுதி செய்யக் கூடியதும், இனங்களை ஒற்றுமைப்படுத்தக்கூடியதுமான ஒரு எதிர்காலத்தினை நோக்கி தமிழ் மக்களும், ஏனைய‌ சிறுபான்மை மக்களும் வாக்களிப்பது பொருத்தமாக இருக்கும் என நாம் கருதுகிறோம். இதன் மூலம் சுதந்திரத்துக்கும், சமத்துவத்துக்குமான‌ கதவுகளை படிப்படியாகவேனும் எம்மால் திறக்க‌ முடியும்.

கையொப்பமிடுவோர்:

Dr. A. Antonyrajan, Department of Geography

Dr. S. Arivalzahan, Department of Mathematics & Statistics

Prof. P. Iyngaran, Department of Chemistry

Dr. S. Jeevasuthan, Department of Sociology

Dr. A. Kadirgamar, Department of Sociology

Prof. R. Kapilan, Department of Botany

Dr. N. Ramaruban, Department of Mathematics & Statistics

Dr. M. Sarvananthan, Department of Economics

Mr. N. Sivakaran, Department of Philosophy

Prof. R. Srikaran, Department of Chemistry

Dr. R. Tharshan, Department of Mathematics & Statistics

Dr. M. Thiruvarangan, Department of Linguistics & English

Dr. N. Varathan, Department of Mathematics & Statistics

Prof. K. Vignarooban, Department of Physics

Mr. S. Wimal, Department of Linguistics & English

 

 

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் தொடர் உயிரிழப்புக்களுக்கு எலிக்காய்ச்சலே காரணம்: பரிசோதனையில் உறுதியானது!

Pagetamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தலைவர்கள் ஒதுங்கி, புதியவர்களுக்கு வழிவிட யோசனை: புதிய அணிகள் இணைய பேச்சு!

Pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

திருத்தப்பட்ட அரசி விலைகள் அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment