தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியுள்ள தரப்புக்களுக்குள், யாழ்ப்பாண பொதுக்கூட்டம் தொடர்பில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
பொ.ஐங்கரநேசன் தலைமையிலான தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினர், இன்று (16) மாலை யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் பொதுக்கூட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்த கூட்டத்தில், பொதுவேட்பாளரை களமிறக்கிய தரப்பிலுள்ள கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை. மூத்த போராளி காக்கா, சாவகச்சேரியை சேர்ந்த அருந்தவபாலன், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அரசியல் விமர்சகர் நிலாந்தன் உள்ளிட்டவர்களே உரையாற்றவிருந்தனர்.
எனினும், தமிழ் பொதுக்கட்டமைப்பிலுள்ள ஏனைய கட்சிகளை, தமிழ் தேசிய பசுமை இயக்கத்தினர் அழைப்பதில்லையென முடிவெடுத்திருந்தனர். “ஒட்டுக்குழுக்களை மேடையேற்றுவதில்லை“ என முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது.
இது, பொதுவேட்பாளர் தரப்பிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தியது. அந்த தரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் தமது கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தன.
சிவில் சமூகமென தம்மை குறிப்பிடும் தரப்பினர் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ள நிலையில், தமக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில்- சிவில் சமூகத்தினர் கலந்துகொள்வது குறித்து அந்த கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.
இதை தொடர்ந்து, இன்று பொதுவேட்பாளர் தரப்பினர் அவசர கலந்துரையாடல் நடத்தி, இன்றைய கூட்டத்துக்கு ஏனைய கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்குமாறு தமிழ் தேசிய பசுமை இயக்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆயினும், தமிழ் தேசிய பசுமை இயக்கம் தனது முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லையென அறிய முடிகிறது. அதன் தலைவர் பொ.ஐங்கரநேசன் தமது நிலைப்பாடு தொடர்பில் பொதுக்கட்டமைப்பிலுள்ளவர்களுக்கு இது தொடர்பில் விளக்கமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.
அதன் விபரம் வருமாறு-
ஊடகமொன்றில் இன்று மாலை நாம் நடாத்தவுள்ள கூட்டத்தில் ஒட்டுக்குழுக்களுக்கு இடமில்லாததால் கட்சிகளுக்கு இடமில்லை என்று செய்தி வெளியாகியுள்ளமை எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. இது திட்டமிட்டுப் பொதுக்கட்டமைப்புக்குள் குழப்பத்தை ஏற்ப்படுத்த வேண்டுமென்றும் எனது கூட்டத்தை நடக்க விடாமல் செய்ய வேண்டும் என்பதற்காகவும் ஒரு சிலரால் மேற்க்கொள்ளப்பட்ட சதி நடவடிக்கை என்றே நான் கருதுகின்றேன்.
நான் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஒட்டுக்குழு என்ற வார்த்தைகளைக் கட்சிகளை விழிப்பதற்குப் பயன்படுத்தியதில்லை. அந்த வார்த்தைப் பிரயோகமே தவறானது என்பது என்னுடைய கருத்து.
இன்று எனது கூட்டம் பசுமை இயக்கத்தின் உறுப்பினர்களுக்கான பொதுக்கூட்டமாகவே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் நான் கட்சிகளை அழைப்பது குறித்து யோசிக்கவில்லை. இதுமட்டுமல்லாமல் பொதுக்கட்டமைப்பில் உள்ள எல்லாக் கட்சிகளிலும் உள்ள தலைவர்களையும் அழைத்து இரண்டு மணித்தியாலக் கூட்டத்தில் உரையாற்றுவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்று எனவும், ஒருவரைவிட்டு இன்னொருவரை அழைப்பது தவறான புரிதலை ஏற்ப்படுத்தும் என்பதாலேயே கட்சிகள் தவிர்க்கப்பட்டன.
சகலரும் இதனைப் புரிந்து கொள்ளுமாறும் திட்டமிடப்பட்டு உருவாக்கப்படும் சதிகளையிட்டும், ஆதாரமற்ற செய்திகளையிட்டும் மனம் சோர்ந்து போக வேண்டாம் என்றும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன்.
ஒரு தவறான பத்திரிகைச் செய்திக்காக கட்சிகளுக்கு இன்று நான் அழைப்பு விடுவது கட்சிகளை அவமதிப்பது போலாகிவிடும்.
இது தொடர்பாக கட்சிகளுடன் உரையாடுவதற்கு நான் சித்தமாய் உள்ளேன்.
தோழமையுடன்
பொ.ஐங்கரநேசன்