மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாலை இழிவுபடுத்தும் வகையில் சுவரொட்டிகளை கொழும்பிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் ஒட்டிய தனியார் பஸ் சாரதி உட்பட மூவர் கைது செய்யப்பட்டதாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேக நபர்களுடன், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் மற்றும் நான்கு கையடக்கத் தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
தற்போது கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் ஒருவரும், கைது செய்யப்படவுள்ள பிரதான சந்தேகநபரும் மோட்டார் சைக்கிளில் சென்று இடங்களைச் சுட்டிக் காட்டுவதுடன், தற்போது கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்து சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
கடந்த ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி, கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகில், சுங்கத்திற்கு அருகில், அளுத்கடை உயர்நீதிமன்றத்திற்கு அருகாமை, பெலவத்தை, பத்தரமுல்லை, கல்கிஸ்ஸ போன்ற மக்கள் வாழும் பிரதேசங்களில் உயர் நீதிமன்ற நீதிபதியை அவமதிக்கும் வகையில் பல சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
இது தொடர்பில் மேல்மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி விசாரணைகளை நடத்தி சந்தேக நபர்களை கைது செய்யுமாறு உத்தரவு பிறப்பித்திருந்ததுடன், மேல் நீதிமன்ற நீதிபதி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கும் முறைப்பாடு செய்திருந்தார்.
இது தொடர்பான முறைப்பாடு தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்து, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து, தொலைபேசி பதிவுகளை ஆராய்ந்து தகவல்களைப் பெற்றனர்.
விசாரணையில், சிசிடிவி காட்சிகள் மூலம் முச்சக்கரவண்டியின் பதிவு இலக்கத்தை உறுதிப்படுத்தி மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முச்சக்கரவண்டியின் சாரதியை அடையாளம் காண முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது குறித்த முச்சக்கரவண்டியை பிலியந்தலை மடபட பொல்ஹேன பிரதேசத்தில் உள்ள ஒருவருக்கு விற்பனை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அந்த முகவரியின்படி முச்சக்கரவண்டியை வாங்கிய நபரும் அதில் பயணித்த மற்றுமொருவரும் சுவரொட்டிகளை ஒட்டியது தெரியவந்துள்ளது. மேலும், மற்றொரு நபரின் அறிவுறுத்தலின் பேரில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது என தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் கைத்தொலைபேசியை பரிசோதித்த போது, ஒட்டப்பட்ட சுவரொட்டிகளின் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பிரதான சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அவரே சுவரொட்டிகளை ஒட்டுமாறு அறிவுறுத்தியதும் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பிரதான சந்தேக நபருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை மஹரகம பத்திரகொட பிரதேசத்தில் வைத்து கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிரதான சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 22 மற்றும் 44 வயதுடைய மாத்தளை பன்னிபிட்டிய ஆரவல, கஹாபொல மடபட மற்றும் பல்லேபொல ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.
சந்தேகநபர்கள் மூவரும் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.