எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களுக்கு பெருமளவு சலுகை வழங்கப்பட்டு மக்கள் அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அனைத்து வேட்பாளர்களின் கூட்டங்களிலும் நாடு முழுவதும் இதேநிலைமைதான் காணப்பட்டாலும், வடக்கில் ரணில் விக்கிரமசிங்க தரப்பினரே இந்த நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாகுவதற்கான கடைசி வாய்ப்பாக தற்போதைய தேர்தல் காணப்படுவதால், இம்முறை வெற்றிபெற்று விட வேண்டுமென்பதில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார்.
வடக்கில் நடக்கும் ரணிலின் தேர்தல் பிரச்சார கூட்டங்களுக்கு செல்லும் மக்களுக்கு பெருமளவு சலுகை வாக்குறுதி வழங்கப்பட்டே அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
இன்று கிளிநொச்சியில் ரணில் விக்கிரமசிங்க கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடக்கிறது.
கிளிநொச்சி நாச்சிக்குடா உள்ளிட்ட சில பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பலர், தாம் கூட்டத்துக்கு அழைக்கப்பட்ட விதம் குறித்து தமிழ் பக்கத்தின் செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
காணி உறுதிப்பத்திரம் பெற வேண்டுமெனில் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென ஈ.பி.டி.பி தரப்பினரால் தாம் வற்புறுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை, அண்மையில் அனுராதபுரத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்துக்கு ஈ.பி.டி.பியினராலும் பேருந்துகளில் ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டனர். தலைக்கு ரூ.2000 பணம், உணவு பொதியென கூறப்பட்டே தாம் அழைக்கப்பட்டதாக அந்த கூட்டத்துக்கு சென்றவர்கள் பலர் தெரிவித்திருந்தது சமூக ஊடகங்களில் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் யாழ்ப்பாணம் முத்திரைசந்தியில் ரணில் கலந்து கொண்ட கூட்டத்துக்கு சென்றவர்களும் இதேவிதமான தகவலையே வழங்கியிருந்தனர். அமைப்பொன்றின் பிரதிநிதி தெரிவிக்கையில், தமது அமைப்புக்கு கதிரை வழங்கப்படுமென விஜயகலா தரப்பினரால் கூறப்பட்டதாகவும், நீங்கள் கூட்டத்துக்கு வராமல் விட்டால் கதிரை கிடையாது என கூறி அழைக்கப்பட்டதாகவும கூறினார்.
அடுத்த சில நாட்களில் யாழ் புறநகர் பகுதியில் ரணில் கலந்து கொள்ளும் தேர்தல் பிரச்சார கூட்டம் நடக்கவுள்ளது. இந்த கூட்டத்தை ஈ.பி.டி.பி தரப்பினரே ஒழுங்கமைக்கின்றனர். இது குறித்து, பாசையூர் பகுதியை சேர்ந்த சிலர் தமிழ் பக்கத்துடன் பேசுகையில், ரணிலின் கூட்டத்துக்கு கிராம மக்கள் வந்தால் தலைக்கு ரூ.2000 வழங்கப்படுமென தகவல் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.
சில நாட்களின் முன்னர் வடமராட்சி குஞ்சர்கடை, கொலின்ஸ் மைதானத்தில் நடந்த ரணிலின் கூட்டத்தை அங்கஜன் தரப்பினர் நடத்தியிருந்தனர். இந்த கூட்டத்துக்கு சென்றவர்கள் பலரும் தமக்கு பணம் வழங்கப்பட்டதாக கூறியதாக சமூக உடகங்களில் தகவல் பரவியிருந்தது குறிப்பிடத்தக்கது.