தமிழ் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள பா.அரியநேந்திரனின் தேர்தல் செலவுக்கென பெருந்தொகை நிதி வெளிநாடுகளிலிருந்து வந்துள்ளது.
புலம்பெயர் அமைப்புக்கள். தனிநபர்கள் தரப்பிலிருந்து ஏற்கெனவே ரூ.75 இலட்சம் பணம் வந்துள்ள நிலையில், லைக்கா நிறுவனம் ரூ.50 இலட்சம் பணத்தை நன்கொடையளித்துள்ளது. மேலும், ரூ.2 கோடியை வழங்குவதாகவும் வாக்குறுதியளித்துள்ளது.
இதேவேளை, பொதுவேட்பாளருக்காக வழங்கப்படும் பணம் வெளிப்படைத்தன்மையாக செலவிடப்படவில்லை, ஏற்பாட்டாளர்கள் சிலரின் பொக்கற்றுக்குள் சென்று கொண்டிருக்கிறது என்ற விமர்சனமும் பொதுவேட்பாளர் தரப்புக்குள் எழுந்துள்ளது.
அண்மையில், பொதுவேட்பாளர் தரப்பினர் கூடிப்பேசும் போது, லைக்கா நிறுவனத்திடம் பணம் கேட்டுப்பார்க்கும்படி ரெலோ யோசனை தெரிவித்திருந்ததை தமிழ்பக்கம் ஏற்கெனவே வெளியிட்டிருந்தது.
லைக்கா நிறுவனத்திடம் பொதுவேட்பாளர் தரப்பினர் பணத்தை கேட்கும் படியும், தாம் சிபாரிசு செய்து விடுவதாகவும் ரெலோ தரப்பினர் கூறியிருந்தனர்.
இதை தொடர்ந்து, பொதுவேட்பாளர் தரப்பிலுள்ள ரெலோ உள்ளிட்ட இரண்டு கட்சிகள் தரப்பினர், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதும் தரப்பையும் உள்ளடக்கி லைக்கா பிரதானிகளுடன் சூம் கலந்துரையாடல் நடந்தது.
இதை தொடர்ந்து ரூ.50 இலட்சம் ரூபா நிதியளிக்கப்பட்டது. மேலும், ரூ.2 கோடி நிதியளிப்பதாக லைக்கா தரப்பினால் தெரிவிக்கப்பட்டது.
என்றாலும், இந்த நிதி விவகார தகவல் வெளியில் கசியக்கூடாது என லைக்கா தரப்பினால் கண்டிப்பாக கூறப்பட்டதாக, நிதி கோரும் சூம் கலந்துரையாடலில் கலந்து கொண்ட ஒருவர் தமிழ்பக்கத்திடம் தெரிவித்தார்.
இதேவேளை, பெருந்தொகை நிதி சேர்ந்த போதும், தேர்தல் செலவுக்காக நிதி செலவிடப்படாமல், ஏற்பாட்டாளர்கள் சிலரின் பொக்கற்றுக்குள் நிதி செல்வதாகவும் குற்றச்சாட்டு உண்டு. யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ளவர்களுக்கு தேர்தல் செலவுக்காக போதிய நிதி வழங்கப்படவில்லையென்ற குற்றச்சாட்டு உள்ளது. சிறிய நிதி சில தரப்புக்களுக்கு வழங்கப்பட்டு, நிதி வழங்கப்படுமென ஏனைய தரப்புக்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டாலும், இதுவரை நிதியெதுவும் கொடுக்கப்படவில்லை.
யாழ்ப்பணத்தில் தொகுதி ரீதியாக கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் ரூ.2 இலட்சம் அளவில் கட்சிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
பொதுவேட்பாளரை ஆதரிக்கும் கட்டுரையாளர் ஒருவர் அண்மையில், புதிய காரொன்றை வாங்கியிருந்ததையும், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதை தவிர அவர் வேறெந்த வருமான வழிகளை கொண்டிருக்கவில்லையென்பதையும் தமிழ்பக்கம் ஏற்கெனவே வெளிப்படுத்தியிருந்தது. இந்த தகவல் வெளியானதையடுத்து அந்த நபர் தமிழ் பக்கத்தை தொடர்பு கொண்டு, வெளிநாட்டு தூதரகமொன்றே அந்த காரை வாங்க பணம் தந்ததாகவும், அந்த செய்தியை நீக்குமாறும் கோரியிருந்தார். எனினும், தமிழ் பக்கம் அந்த செய்தியை நீக்கவில்லை.