எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பு தனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
தமிழ்பக்கத்திடம் இதனை தெரிவித்தார்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்தியகுழு கூட்டம் இன்று (1) வவுனியாவில் நடந்தது. இதில், ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முடிவெடுக்கப்பட்டதாக, எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார். அவர் இதனை அறிவித்த போது, அவருக்கு அருகில் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ப.சத்தியலிங்கம், கட்சியின் சிரேஸ்ட உப தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் நின்றிருந்தனர்.
எனினும், இன்றைய கூட்டத்தில், பொதுவேட்பாளரை ஆதரிக்கும் தரப்பினர் பெரும்பாலும் கலந்து கொள்ளவில்லை. மாவை சேனாதிராசா உடல்நல குறைவினால் கலந்துகொள்ளவில்லை. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கு நிதி திரட்டுவதற்காக சிறிதரன் வெளிநாட்டு சுற்றுலா சென்றுவிட்டார். ஞா.சிறிநேசன், சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் கலந்துகொள்ளவில்லை. கே.வி.தவராசா இடைநடுவே சென்றுவிட்டார். ஜனாதிபதி தேர்தலில் யாரையாவது ஆதரிக்கும் இறுதி முடிவெடுப்பது பற்றி கூட்டத்தின் ஆரம்பத்தில் சொல்லப்படவில்லை, அப்படி சொல்லப்பட்டிருந்தால் தான் கூட்டத்தில் இறுதிவரை கலந்துகொண்டிருப்பேன் என அவர் தெரிவித்தார்.
பொதுவேட்பாளரை ஆதரிக்காத சாள்ஸ் நிர்மலநாதனும் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.
இந்த நிலையில், சுமந்திரன் அணியின் ஆதிக்கம் அதிகமிருந்த சமயத்தில், ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இந்த முடிவு தொடர்பில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிடம் தமிழ் பக்கம் வினவியபோது- இந்த செய்தியை ஊடகங்கள் வாயிலாகவே அறிந்ததாகவும், இது தனக்கு ஆச்சரியமளித்ததாகவும் தெரிவித்தார்.
இந்த முடிவு எடுப்பதற்கு முன்னதாக கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் தன்னுடன் கலந்தாலோசித்திருக்க வேண்டுமென்றும், அப்படி நடக்கவில்லை, இது தவறான நடவடிக்கையென்றார்.