கன்னட முன்னணி நடிகர் தர்ஷன் தனது காதலியும் நடிகையுமான பவித்ரா கவுடாவை சமூக வலைத்தளத்தில் சீண்டிய தனது ரசிகர் ரேணுகா சுவாமியை கொலை செய்த வழக்கில் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவரது மேலாளர் நாகராஜ், பவித்ரா கவுடா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு பெங்களூருவை அடுத்துள்ள பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் தர்ஷன் சிறையில் நாற்காலியில் அமர்ந்து சொகுசாக நண்பர்களுடன் பேசியவாறு தேநீர் குடித்துக்கொண்டே,சிகரெட் புகைப்பது போன்ற புகைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. அவருடன் குற்றவாளிகளான ரவுடி வில்சன் கார்டன் நாகா, குள்ளா சீனா ஆகியோரும், தர்ஷனின் மேலாளர் சீனிவாஸும் உள்ளனர்.
இந்த படம் வெளியான சில மணி நேரத்தில் தர்ஷன் தனது நண்பருடன் வீடியோ காலில் பேசும் வீடியோவும் வெளியானது. சுமார் 25 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் தர்ஷன் சொகுசான அறையில் இருந்து சிரித்தவாறு பேசுகிறார். இந்த வீடியோவும், புகைப்படமும் சமூக வலைதளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக உள்துறைஅமைச்சர் பரமேஸ்வரா கூறும்போது, ‘‘பெங்களூரு சிறையில் விதிமுறை மீறல் நடந்துள்ளது. இதையடுத்து சிறையின் தலைமைகண்காணிப்பாளர் சேஷமூர்த்தி, கண்காணிப்பாளர் மல்லிகார் ஜூன் சுவாமி உட்பட 9 அதிகாரிகள்பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள் ளனர்” என்றார்.
முதல்வர் சித்தராமையா கூறும்போது, ‘‘இந்த விவகாரம் குறித்து உள்துறை அமைச்சருடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். சில அதிகாரிகள் பணம் வாங்கி கொண்டு இந்த விதிமுறை மீறலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நடிகர் தர்ஷன் உள்ளிட்டோரை வேறு சிறைக்கு மாற்றுவது குறித்தும் ஆலோசித்து வருகிறோம்” என்றார்.
இந்நிலையில், கொல்லப்பட்ட ரேணுகா சுவாமியின் தந்தை சிவண்ணா கவுடா கூறும்போது, ‘‘என் மகனை கொன்றவர்கள் சிறையில் சொகுசாக இருப்பதை தொலைக்காட்சியில் பார்த்தேன். போலீஸார் மீது இருந்த நம்பிக்கை போய்விட்டது” என்றார்.
ஷாப்பிங் சென்ற சசிகலா: பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா, கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி, முத்திரைத் தாள் மோசடி மன்னன் தெல்கி உள்ளிட்டோர் சொகுசு வசதிகளை அனுபவிக்கும் புகைப்படங்கள் ஏற்கெனவே வெளியாகி உள்ளன.சசிகலாவும், இளவரசியும் சுடிதார் அணிந்து சிறையில் இருந்து ஷாப்பிங் சென்ற வீடியோவும் சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.