தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்க வேண்டுமென தீவிரமாக செயற்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், அரச உத்தியோகத்தை பாதுகாக்கும் நோக்கில் பொதுவேட்பாளரை ஆதரித்து பகிரங்கமாக செயற்படாமலிருக்க முடிவு செய்துள்ளார்.
தனது அரச உத்தியோகத்துக்கு ஆபத்து நேரலாமென எச்சரிக்கப்பட்டதையடுத்து, அவர் பொதுவேட்பாளர் விவகாரத்தில் பகிரங்கமாக செயற்படாமலிருக்க முடிவு செய்துள்ளதாக அவருக்கு நெருக்கமான வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைத்தது.
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை களமிறக்க வேண்டும், பொதுவேட்பாளரை எதிர்ப்பவர்கள் அறிவில்லாதவர்கள், சதிக்கோட்பாட்டாளர்கள் என வாராவாரம் கட்டுரைகள் எழுதி வந்தவர் பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம்.
தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்க வேண்டுமென தீவிரமாக செயற்பட்டவர்கள்- சிவில் சமூகமென்ற பெயரில் இயங்கும் தனிநபர்கள், எந்த செயற்பாட்டு பாரம்பரியமும் அற்றவர்கள், பிரமுகர் விருப்பத்தனத்தின் வெளிப்பாடாகவும், தூதரகங்களில் பணம் பெற்றுக்கொண்டுமே பொதுவேட்பாளர் கோசத்தை முன்னெடுக்கிறார்கள், இவர்களை நம்பி களமிறங்குவது மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவதற்கு ஒப்பானது என்பதை தமிழ்பக்கம் பலமுறை சுட்டிக்காட்டியிருந்தது.
அதை மெய்ப்பிக்கும் விதமாக, பேராசிரியர் கே.ரி.கணேசலிங்கம், பொதுவேட்பாளர் விவகாரத்தில் நேரடியாக செயற்படுவதிலிருந்து ஒதுங்கியுள்ளார்.
கடந்த 18ஆம் திகதி தந்தை செல்வா நினைவிடத்தில் பா.அரியநேந்திரன் மலரஞ்சலி செலுத்திய போது, கே.ரி.கணேசலிங்கமும் அதில் கலந்து கொண்டிருந்தார். அதன்பின்னர் அவர் பொதுவேட்பாளர் தொடர்பான எந்த நடவடிக்கையிலும் பங்கேற்கவில்லை.
பொதுவேட்பாளரின் முதலாவது கூட்டம் முல்லைத்தீவில் நடைபெற்றது. இதிலும் கணேசலிங்கம் கலந்துகொள்ளவில்லை. எனினும், உள்ளக கலந்துரையாடல்கள், இணையவழி கலந்துரையாடல்களில் மட்டும் கலந்து கொள்கிறார்.
தனது உயரதிகாரிகளின் எச்சரிக்கைகளையடுத்து கே.ரி.கணேசலிங்கம், பொதுவேட்பாளர் விவகாரத்தில் நேரடியாக செயற்படுவதிலிருந்து ஒதுங்கியுள்ளதக தமிழ் பக்கம் அறிந்தது. இதனை, பொதுவேட்பாளர் ஏற்பாட்டு தரப்பினரும், தமிழ்பக்கத்திடம் உறுதிசெய்தனர்.