தமிழ் பொதுவேட்பாளர் என்பது இலங்கைத் தீவில் தேவையற்ற இனமுறுகலை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
தமிழ் அரசியல் கட்சிகளான ரெலோ, புளொட் ஆகியவற்றுடனான சந்திப்பில் இன்று (13) இதனை தெரிவித்தார்.
தமிழ் பொதுவேட்பாளரை களமிறக்கியுள்ள தரப்பிலுள்ள ரெலோ, புளொட் என்பவற்றை இன்று காலை எதிர்கட்சி அலுவலகத்தில் நடந்த சந்திப்பின் போது இதனை தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன். செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தம் கருணாகரன், மற்றும் ரெலோவின் தேசிய அமைப்பாளர் கு.சுரேன் ஆகியோர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சந்திப்பில் கருத்து வெளியிட்ட சஜித், தான் ஜனாதிபதியானதும் 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி, தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பதாக தெரிவித்தார்.
தான் இதுவரை அதிகாரத்துக்கு வரவில்லையெனவும், அதனால் ஏனையவர்களுடன் தன்னை ஒப்பீடு செய்வது சரியான அணுகுமுறையல்ல என்றும் தெரிவித்தார்.
வடக்கில் நல்லாட்சி காலத்தில் அமுல்ப்படுத்தப்பட்ட வீட்டுத்திட்டம் பாதியில் நிற்பதால் பலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதை அறிந்துள்ளதகவும், தான் கடந்த ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்ததால் அதனை சரி செய்ய முடியவில்லையென்றும், அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்ததும், இந்த பிரச்சினையையும் தீர்ப்பதாகவும் தெரிவித்தார்.
தமிழ் பொதுவேட்பாளர் தேவையற்ற விடயமென்றும், இதனால் இலங்கை தீவில் இனரீதியான முறுகல்கள் எழலாம் என்றும் தெரிவித்தார்.