“சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன். முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை” என பிக்பாஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளரும், நடிகருமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில், “7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பயணத்திலிருந்து நான் ஒரு சிறிய இடைவெளி எடுத்துக் கொள்கிறேன் என்ற தகவலை கனத்த இதயத்துடன் அறிவிக்கிறேன். முந்தைய திரைப்படங்களின் கமிட்மென்ட் காரணமாக ‘பிக்பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியில் அடுத்து வரும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.
உங்கள் இல்லங்களின் வழியே வந்து உங்களை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அன்பையும், பாசத்தையும் பொழிந்த உங்களுக்கு என்னுடைய நன்றிகள். இந்தியாவின் சிறந்த தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக பிக்பாஸ் தமிழ் மாறியதற்கு, நீங்கள் அளித்த உணர்வுபூர்வமான, உற்சாகமான ஆதரவே அடிப்படை காரணம். தனிப்பட்ட முறையில் தொகுப்பாளராக நான் கற்று கொண்டதை நேர்மையாக உங்களிடம் பகிர்ந்து கொண்டேன். இந்த அனுபவத்திற்காக நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களுக்கு என்னுடைய மனபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இறுதியாக, இந்நிகழ்ச்சியின் வெற்றிக்காக பாடுபட்ட விஜய் டிவி குழுவினருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சீசன் மற்றொரு வெற்றி சீசனாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்று கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.