2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலை தொடர்பில் யாழ்.மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஆறு பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு விசாரணையை ஜனவரி 20ஆம் திகதி நடத்துவதற்கு உயர் நீதிமன்றம் திகதியை நிர்ணயித்துள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் நேற்று (30) பிரிதி பத்மன் சூரசேன, யசந்த கோதாகொட, ஏ.எச்.எம்.டி. நவாஸ், ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்டன.
இந்த வழக்கில் தொடர்புடைய பிரதிவாதிகளில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர்.
பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஆறுமுகம் ரகுபதி, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை பெற்றுக் கொள்வதில் தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, இந்த பிரதிவாதிகள் 08 வருடங்களுக்கும் மேலாக சிறைச்சாலையில் உள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அப்போது, இந்த வழக்கு தொடர்பான மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த பிரதிவாதிகள் கொலை, சதி உள்ளிட்ட குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நடைபெற்ற வழக்கு விசாரணையில் இரண்டு பிரதிவாதிகள் விடுவிக்கப்பட்டதாகவும் சொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த ஐந்து பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, வழக்கு தொடர்பான மொழிபெயர்ப்பு ஆவணங்களை மேல்முறையீட்டு-பிரதிவாதிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சொலிசிட்டர் ஜெனரலுக்கு அறிவித்தது.
அதன்பிறகு, இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை ஜனவரி 20ஆம் திகதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது.



