யாழ்ப்பாணத்தில் உள்ள பேஸ்புக் காதலியை சந்திப்பதற்காக வந்த இளைஞன் ஒருவர், முச்சக்கர வண்டியில் கடத்தப்பட்டு, வாளால் வெட்டி சித்திரவதை செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (26) மாலை இந்த சம்பவம் நடந்தது.
உடல் முழுவதும் இரத்தக்காயங்களுடன் இளைஞன் வீதியில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பூநகரி, கிராஞ்சியை சேர்ந்த பிரதீபன் வினுஜன் என்ற இளைஞரே படுகாயமடைந்துள்ளார்.
பேஸ்புக் பதிவுகள் தொடர்பாக தகராற்றையடுத்து, பெண் ஒருவர் மூலம் காதல் நாடகம் அரங்கேற்றப்பட்டு, இந்த இளைஞனுக்கு பொறி வைத்து பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் சந்தேகிக்கின்றனர்.
பேஸ்புக்கில் சில நாட்கள் மட்டும் அறிமுகமான காதலியை சந்திப்பதற்காக இந்த இளைஞன் நேற்று யாழ்ப்பாணம் வந்துள்ளார்.
மிக அண்மையில் மது என்ற பெயரில் யுவதியொருவர் பேஸ்புக் வழியாக காதல் கொண்டுள்ளார். இளைஞனை சந்திக்க வேண்டுமென அழைத்ததையடுத்து, இளைஞனும் ஆர்வ மிகுதியில் புறப்பட்டு வந்துள்ளார்.
கொக்குவில் இலங்கை வங்கிக்கு முன்பாக நிற்குமாறு பேஸ்புக் காதலி குறிப்பிட்டுள்ளார். பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, 10 நிமிடத்தில் வருவேன், 5 நிமிடத்தில் வருவேன் என கூறியபடியிருந்துள்ளார்.
எனினும், காதலி வரவில்லை. மதியம் 2 மணிக்கு பின்னதாக முச்சக்கர வண்டியில் வந்த சில இளைஞர்கள், இந்த இளைஞனை ஏற்றிச் சென்று, கடுமையாக தாக்கியுள்ளனர். உடல் முழுவதும் வாள்களால் கீறி சித்திரவதை செய்தனர். தலைமுடியையும் வெட்டியுள்ளனர்.
இதன்பின்னர் குறித்த இளைஞனை உடுவில் பகுதியிலுள்ள வீதியொன்றில் போட்டுவிட்டு குறித்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.
பேஸ்புக் தகராற்றினால், பெண்ணொருவர் மூலம் வலை விரிக்கப்பட்டு, இந்த இளைஞன் மடக்கிப் பிடிக்கப்பட்ள்ளதாக தெரிய வருகிறது. இளைஞனின் தொலைபேசியும் பறிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு தொலைபேசி அழைப்பேற்படுத்தியவர்களையும் அடையளம் காண முடியவில்லை.