ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஒன்றான தமிழீழ இராணுவத்தின் (TEA) தலைவர் தம்பிப்பிள்ளை மகேஸ்வரன் (பனாகொட மகேஸ்வரன்) யாழ்ப்பாணத்தில் காலமாகியுள்ளார்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவை பூர்வீகமாக கொண்ட மகேஸ்வரன், பின்னர் யாழ்ப்பாணம் பிறவுண் வீதியில் வளர்ந்தார்.
70 களின் நடுப்பகுதியில் இங்கிலாந்தில் பொறியியல் உயர் கல்வியை கற்றுக் கொண்டிருந்தவர், கல்வியை இடைநிறுத்தி விட்டு இலங்கை திரும்பி, இனவிடுதலைப் போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தினார்.
இவர் இராணுவத்தினரால் கைதாகி பனாகொட இராணுவ தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்தார். அங்கிருந்த தடுப்பு கம்பிகளை வாளால் அரிந்து சுவிங்கம் மூலம் ஒட்டி வைத்து சந்தர்ப்பம் பார்த்து கம்பிகளை அகற்றி தப்பிய போதிலும், மறுநாளே மாறு வேடத்தில் நடமாடிய வேளை கொழும்பில் மீண்டும் கைதானார்.
1983 வெலிக்கடை சிறை கைதிகளில் படுகொலை சம்பவத்தில் இவர் உட்பட கைதிகள் தங்கியிருந்த கூண்டுக்குள் காடையர்கள் புக முற்பட்ட வேளை நுழைய விடாமல் போராடி தடுத்தார். பின்னர், வெலிக்கட தமிழ் கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டனர்.
பின்னர், மட்டக்களப்பு சிறை உடைத்து தப்பியவர்களில் மகேஸ்வரனும் ஒருவர்.
அங்கிருந்து தப்பிய பின்னர், அவர் தலைமையில் காத்தான்குடி வங்கிக் கொள்ளையில் அவரது அமைப்பினர் ஈடுபட்டனர்.
தமிழீழ இராணுவத்தை ஆரம்பித்த போது, அந்த இயக்கம் மூலம் அதிர்ஸ்டலாப சீட்டு விற்பனை செய்யப்பட்டது. முதற்பரிசாக கார் அறிவிக்கப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. எனினும், அதிர்ஸ்டலாப சீட்டு குலுக்கப்பட முன்னரே, அந்த இயக்கத்தை, விடுதலைப் புலிகள் தடை செய்தனர்.
பின்னர், இவர் இந்தியா சென்று தனது அமைப்பு பணிகளை மேற் கொண்டார். மீனாம்பக்கம் விமான நிலைய குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட நிலையில் தலைமறைவாகியிருந்தார்.
பின்னர், இந்தியாவில் கைதாகி சுமார் 12 வருடங்கள் வரை சிறையில் கழித்தார். பின்னர், வெளிநாடு செல்லும் முயற்சியில் ஈடுபட்டு சிறிது காலம் ஆபிரிக்க நாடொன்றில் கழித்து, அந்த முயற்சி வெற்றி பெறாமல் இந்தியா திரும்பினார்.
சிறிது காலம் இந்தியாவில் கழித்தவர், 2009 யுத்தம் நிறைவடைந்த பின்னர், இலங்கை திரும்பினார். நாடு திரும்பிய அவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தங்கியிருந்தார். கொழும்பில் சில காலம் தங்கியிருந்த பின், யாழ்ப்பாணம் வந்து, நாயன்மார்கட்டில் தங்கியிருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
தான் தங்கியிருந்த வீட்டின் பின்பகுதியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
அவரது உடல் இன்று (20) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தது தெரிய வந்தது.