தமது தொழில் நியமனம் தொடர்பில் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று ஒன்று கூடி காரைதீவு சந்திக்கு அருகில் தமது பிள்ளைகளுடன் வந்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏனைய மாவட்டங்களை போன்று அம்பாறை மாவட்டத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கும் நியமனங்களை வழங்க அரசாங்கம் முன்வரவேண்டும் என்று இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், தமது தொழில் நியமனத்தை உறுதிப்படுத்தும் வகையில் பல்வேறு கோசங்களும் எழுப்பப்பட்டன.
வயது ஏறுகிறது வாழ்க்கை போகுது வேலை வேண்டும், நாம்கண்ட கனவு பொய்யாகிவிடுமோ, பட்டம் வீட்டில் நாங்கள் றோட்டில் “பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்”, “கல்வி கொடுத்த அரசே கொள்ளிவைக்கலாமா?”, “அழிக்காதே அழிக்காதே எமது எதிர்காலத்தினை அழிக்காதே” போன்ற வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளையும் போராட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.
வருடங்கள் போகப்போக வயது போவதன் காரணமாக பின்னர் தொழில் ஒன்றை பெற்றுக்கொள்ள முடியாத நிலையும் ஏற்படும் எனவும் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் மேலும் தெரிவித்தனர்.
அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் அழிக்காதே அழிக்காதே எதிர்காலத்தினை அழிக்காதே, பட்டதாரிகள் வீதிகளில் நின்றால் நாடு முன்னேறுவது எவ்வாறு?, பட்டதாரிகள் எப்போதும் வீதிக்கு வருவது ஏன்? போன்ற பதாகைகளை தாங்கியவாறு போராட்டக்காரர்கள் தமது தொழில் உரிமையினை வலியுறுத்தும் வகையிலான பல்வேறு கோசங்களையும் எழுப்பினர்.
தமது போராட்டம் தொடர்பில் இதுவரையில் உரிய அதிகாரிகள் கவனத்தில் கொள்ளவில்லை என கவன ஈர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது சிறிது தூரம் பேரணியாக இடம்பெற்றதுடன் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் உதுமாலெப்பை முகமது முஹ்சீன் , செயலாளர் அப்துல் வஹாப் முப்லிஹ் அகமட் உட்பட குறித்த போராட்டத்திற்கு ஆதரவாக அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். லோகநாதன் கலந்து கொண்டு உரையாற்றியதுடன் பேரணியிலும் இணைந்து கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.
-பாறுக் ஷிஹான்-