எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள ‘சரிபோதா சனிவாரம்’ படத்தின் கிளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
“முன்னொரு காலத்தில் நராகாசூரன் என பெயர் கொண்ட ராட்சசன் இருந்தான். அவன் மக்களை கொடுமைப்படுத்திக் கொண்டிருந்தான்” என்ற பின்னணி குரல் ஒலிக்க, அதிரடியாக என்ட்ரி கொடுக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. இரக்கமில்லாத கொடூர காவல் துறை அதிகாரியாக அவர் மக்களை அடிப்பது, உதைப்பது, சித்தரவதை செய்யும் காட்சிகள் அடுத்தடுத்து காட்டப்படுகின்றன.
“இதற்காகவே ஸ்ரீகிருஷ்ணர் சத்யபாமாவுடன் களமிறங்கினார்” என அடுத்து வரும் பின்னணி குரலில் நானியும் பிரியங்கா மோகனும் நடந்து வருகின்றனர். எஸ்.ஜே.சூர்யாவை நரகாசூரனாகவும், அவரை அழிக்க வரும் கிருஷ்ணராக நானியையும் சித்தரித்துள்ளனர். இது வழக்கமான நல்லவன் vs கெட்டவன் கான்செப்ட். இறுதியில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதுடன் வீடியோ முடிகிறது. இந்த வீடியோவில் தனது நடிப்பால் கவனம் பெறுகிறார் எஸ்.ஜே.சூர்யா.
வாரம்: நானி நடிப்பில் தெலுங்கில் வெளியான ‘அந்தே சுந்தரானிகி’ படத்தின் இயக்குநர் விவேக் ஆத்ரேயா மீண்டும் நானியுடன் அடுத்த படத்துக்காக கைகோர்த்துள்ளார். இந்தத் திரைப்படத்தை ‘ஆர்ஆர்ஆர்’ படத்தை தயாரித்த டிவி வி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் டிவிவி தனய்யா மற்றும் கல்யாண் தாசரி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.
தெலுங்கில் உருவாகும் இப்படத்துக்கு ‘சரிபோதா சனிவாரம்’ (Saripodhaa Sanivaaram) என பெயரிடப்பட்டுள்ளது. தமிழில் ‘சூர்யாவின் சனிக்கிழமை’ என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் நாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். எஸ்.ஜே.சூர்யா போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கிறார். படம் இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வரும் என தெரிகிறது.