தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கச் செயற்குழு கூட்டம் அதன் தலைவர் என்.ராமசாமி தலைமையிலும் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், கதிரேசன், துணைத்தலைவர்கள் தமிழ்க்குமரன், இணைச் செயலாளர் சவுந்தரபாண்டியன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில், தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கும் திரைப்படதொழிலாளர்கள் சம்மேளனத்துக்கும் இடையேயான புரிந்துணர்வு வழிகாட்டுதல் ஒப்பந்தம் அமல்படுத்தவேண்டும், தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பரிந்துரை கடிதம் பெற்று நடைபெறும் படப்பிடிப்புக்குச் சென்று‘ஸ்குவாட்’ என்ற பெயரில் தொழிலாளர் சம்மேளனத்தினர் இடையூறு செய்யக்கூடாது, படப்பிடிப்புகளை நிறுத்தக் கூடாது, சில நடிகர்கள் மீது தயாரிப்பாளர்கள் அளித்த புகார்கள் நீண்ட நாட்களாக நிலுவையில் இருப்பதால் நடிகர் சங்ககவனத்துக்கு அதைக் கொண்டு சென்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கமல்ஹாசன், தனுஷ், சிம்பு, விஷால் மீது சில தயாரிப்பாளர்கள் கொடுத்துள்ள புகாரை அடுத்து அவர்களுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் தடை விதித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகி இருந்தன.