05 வருடங்களுக்கு முன்னர் அதாவது; 2019ஆம் ஆண்டு டுபாயில் வைத்து பாதாள உலகக் குழுத் தலைவர் மாகந்துரே மதுஷ், கஞ்சிபானி இம்ரான் மற்றும் பலரைக் கைது செய்ததில் “கிளப் வசந்த” ஈடுபட்டுள்ளதாகத் தற்போது (09) தகவல்கள் வெளியாகி வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மதுஷுக்குச் சொந்தமான 100 கோடி ரூபா பணம் கிளப் வசந்த வசம் இருப்பதாகவும்; காஞ்சிபானை பல சந்தர்ப்பங்களில் அந்தப் பணத்தை வசந்தவிடம் கேட்டிருக்கிறார்; ஆனால் அந்த தொகையை வசந்த திருப்பிக் கொடுக்கவில்லை என்பதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறானதொரு நிலை காரணமாக நுவரெலியா பிரதேசத்தில் கிளப் வசந்தவை கொலை செய்ய திட்டமிடப்பட்டதாகவும், அதுவும் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறானதொரு பின்னணியில் நேற்று (08) அத்துரிகிரிய பிரதேசத்தில் கிளப் வசந்தவை சுடுவதற்கு கச்சிதமாக இடம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கொலைக்கான திட்டங்கள் 03 மாதங்களாக தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதற்காக பலப்பிட்டியில் வசிக்கும் பச்சை குத்திக் கொள்ளும் திறன் கொண்ட இளைஞர் ஒருவர் பயன்படுத்தப்பட்டுள்ளார். அந்த இளைஞன் டுபாயில் உள்ள தனது நண்பர் மூலம் அங்கு வசிக்கும் மற்றுமொரு நபருடன் நெருங்கிய உறவைப் பேணி வந்துள்ளார்.
அந்த இளைஞனுக்கு பச்சை குத்தும் திறன் இருந்தபோதிலும், அதற்கான நிலையமொன்றை அமைப்பதற்கு போதுமான சொத்துக்கள் அவரிடம் இல்லை.
அப்போது, டுபாயில் உள்ள அவரது நண்பர் ஒருவர், டாட்டூ பார்லர் கட்ட பணம் தருவதாக கூறினார்; அதற்காக கிளப் வசந்தவை கொல்ல உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி இந்த இளைஞனின் தனது வங்கிக் கணக்கில் 10 இலட்சம் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. இதனையடுத்து கொலைக்கு இலக்கான கிளப் வசந்தவை பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவிற்கு அழைத்து வர அழைப்பு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், இந்த நிகழ்விற்கு மற்ற பிரபல கலைஞர்களை அழைக்குமாறு பச்சை குத்தும் கடையின் உரிமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.