ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ பதவிக்காலம் முடிவடையும் திகதி தொடர்பான விளக்கத்தை நீதிமன்றம் வழங்கும் வரை திட்டமிடப்பட்ட ஜனாதிபதி தேர்தலை தேர்தல்கள் ஆணைக்குழு நடத்துவதை தடுக்கும் வகையில் இடைக்கால உத்தரவை கோரி தொழிலதிபர் சி.டி.லெனவா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய உயர் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் திங்கட்கிழமை (8) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளது.
நீதிபதிகள் விஜித் மலல்கொட, முர்து பெர்னாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன மற்றும் எஸ். துரைராஜா ஆகியோரும் இந்த பெஞ்சில் இடம்பெற்றுள்ளனர்.
19வது திருத்தத்தின் 3வது பிரிவின் மூலம் அரசியலமைப்பின் 30(2) பிரிவு திருத்தப்பட்ட போதிலும், இந்த திருத்தம் சர்ச்சைக்குரியது என மனுதாரர் வாதிடுகிறார்.
அரசியலமைப்பின் 12 ஆவது அத்தியாயத்தை பரிசீலிக்கும் போது, 19 ஆவது திருத்தம் உரிய முறையில் அமுல்படுத்தப்படவில்லை எனவும் இதனால் அரசியலமைப்பு மீறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மனுதாரரின் கூற்றுப்படி, இந்த திருத்தம் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைத்தது மற்றும் அந்த நேரத்தில் பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு பொருந்தும் வகையில் இருந்தது. எவ்வாறாயினும், பதவியில் இருக்கும் ஜனாதிபதியைப் பாதிக்கும் எந்தவொரு திருத்தமும் அரசியலமைப்பின் 12 வது பிரிவின் கீழ் பொது வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும், இது இந்த விவகாரத்தில் நிகழவில்லை.
19ஆவது திருத்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2019 நவம்பர் 16ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதாக மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார். சட்டத்திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாததால், அவரது பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் நீடிக்க வேண்டும். இதன் விளைவாக, பாராளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு வாரிசு ஜனாதிபதியும் மீதமுள்ள ஆறு வருட பதவிக் காலத்தை வகிக்க வேண்டும்.