கதிர்காம பாதயாத்திரிகர்கள் நலன் கருதி கிழக்கு மாகாண சுகாதார சுதேச வைத்திய அமைச்சு, கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் மற்றும் கல்முனை, அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைகள் இணைந்து நடாத்திய இலவச மருத்துவ முகாம்கள் (01) உகந்தை மற்றும் குமண போன்ற இடங்களில் இடம்பெற்றது.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” எனும் தொணிப் பொருளில் இடம்பெற்ற இந்த இலவச மருத்துவ முகாமின்போது, 2000 பாதயாத்திரிகர்களின் தாக சாந்திக்கான குளிர்பானம் வழங்கி வைக்கப்பட்டது. இதனை அக்கரைப்பற்றைச் சேர்ந்த பிரபல வர்த்தகர் அல்ஹாஜ் அப்துல் சலாம் அவர்களின் ஒத்துழைப்போடு அவரின் கரங்களினால் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கமைவாக, கிழக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் மற்றும் சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் ஆகியோரின் அறிவுறுத்தல்களின் கீழ் கல்முனை மற்றும் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலில் கிழக்கு மாகாண சுதேச மருத்துவ பிரதி மாகாண ஆணையாளர் வைத்தியர் எம்.ஏ.நபீலின் மேற்பார்வையில் 1000 பேருக்கு நோய் எதிர்ப்பாற்றல் மருந்து, (இமியூன் வூஸ்ட்டர் பானம்) உடல் உபாதைகளை நீக்கக்கூடிய மருந்துகள் மற்றும் உடல் வலிகளைப் போக்கும் ஆயுர்வேத மருந்துகளும், பாம் போன்ற பல மருந்துகளும் வழங்கி வைக்கப்பட்டது.
கடந்த 6 வருடங்களுக்கு முன்னர் கல்முனை பிராந்திய பணிப்பாளராக கடமையாற்றிய வைத்தியர் குணசிங்கம் சுகுணன் அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த இலவச மருத்துவ நடமாடும் சேவைகளுடன் குளிர்பானங்கள் மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் மருந்து (இமியூன் வூஸ்ட்டர் பானம்) போன்ற பல தரப்பட்ட மருந்துகள் இன்றுவரை தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த இலவச மருத்துவ முகாமில் ஆயுர்வேத வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் ஆகியோர் பங்கேற்று கதிர்காம பாதயாத்திரிகர்களுக்கான சிறந்த சேவைகளை வழங்கி வைத்தனர் என்பதும் சிறப்பம்சமாகும்.
-அபு அலா-