கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள 21 பேரில் 11 பேரை பொலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி பொலிஸார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர்.
கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய சம்பத்தில் 64 பேர் உயிரிழந்த நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடி பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்தவகையில் விஷ சாராய விற்பனை மற்றும் உற்பத்தி செய்த வகையில 21 பேரை சிபிசிஐடி பொலிஸார் கைது செய்து நீதிமன்றக் காவலில் கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்களில், கண்ணு குட்டி என்கின்ற கோவிந்தராஜ், விஜயா ,சின்னதுரை, ஜோசப் என்கின்ற ராஜா, மடுகரை மாதேஷ், சிவக்குமார், பன்சில்லால், கவுதம்சந்த், கதிரவன், கண்ணன் மற்றும் சக்திவேல் ஆகிய 11 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி சிபிசிஐடி பொலிஸார், வெள்ளிக்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி ஸ்ரீராம் முன்னிலையில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து, இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.