சென்னை நீலாங்கரையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவில் ஓடுகளை உடைத்து சாகசத்தில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 2 பேருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது. மண்ணெண்ணெய்க்கு பதிலாக பெட்ரோல் பயன்படுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து நீலாங்கரை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தை தவிர்த்து விட்டு, கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்யுமாறு நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். அவரது உத்தரவையடுத்து, தமிழகம் முழுவதிலும் இருந்து தவெக நிர்வாகிகள் பலர் கள்ளக்குறிச்சி சென்று அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகளை செய்தனர். ஆனாலும், பல இடங்களில் தவெக நிர்வாகிகள் பலர், விஜய்யின் உத்தரவையும் மீறி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்தவகையில், சென்னை புறநகர் மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ஈசிஆர் பி.சரவணன் தலைமையில் நீலாங்கரையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் சனிக்கிழமை நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பல்வேறு கலை மற்றும் சாகச நிகழ்ச்சிகளையும் நடத்தினர். நிகழ்ச்சியின் போது, கிஷோர் (11) என்ற சிறுவன், கராத்தேயில் ‘போர்டு பிரேக்கிங்’ எனப்படும் ஓடுகளை உடைக்கும் சாகசத்தில் ஈடுபட்டார். அப்போது, கையில் பெட்ரோலை ஊற்றி தீயை பற்ற வைத்து சிறுவன் ஓடுகளை உடைத்ததாகக் கூறப்படுகிறது. ஓடுகளை உடைத்து பிறகு, சிறுவன் தனது கையில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். ஆனால், தீ அனையவில்லை.
இதையடுத்து, அருகில் இருந்த ராஜன்(38) என்பவர், சிறுவனின் கையில் எரிந்த தீயை அணைக்க முயன்றார். அப்போது, அவரது கையில் இருந்த பாட்டிலில் இருந்து பெட்ரோல் , சிறுவனின் கைகளில் சிந்தியது. இதனால், சிறுவன் கை மேலும் தீப்பிடித்து எரிந்தது. அதுமட்டுமில்லாமல், தீயை அணைக்க முயன்ற ராஜன் மீதும் பெட்ரோல் சிந்தியதால், அவரது உடலிலும் தீப்பிடித்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், சிறுவனையும், ராஜனையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வழக்கமாக ஓடுகளை உடைக்க மண்ணெண்ணெய் தான் பயன்படுத்துவார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சியில் பெட்ரோலை பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. மேலும், எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் விஜய் பிறந்தநாள் நிகழ்ச்சியில் சிறுவர்களை சாகசத்தில் ஈடுபடுத்தி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து நீலாங்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.