கிழக்கு லெபனானில் வாகனம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் கூட்டாளியான லெபனான் அல்-ஜமா அல்-இஸ்லாமியாவின் தலைவர் சனிக்கிழமை கொல்லப்பட்டதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஒக்டோபர் 7 அன்று இஸ்ரேல்-ஹமாஸ் போர் வெடித்ததில் இருந்து, லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கம் மற்றும் பாலஸ்தீனிய போராளிகளுடன் இணைந்த பிற குழுக்கள் தெற்கு எல்லையில் இஸ்ரேலுடன் தினசரி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகின்றன.
“அல்-ஜமா அல்-இஸ்லாமியாவின் அல்-ஃபஜ்ர் படைகளின் தலைவரான அய்மன் கோட்மே, மேற்கு பெக்காவில் உள்ள கியாராவில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என சிரிய பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. சிரியாவின் எல்லையிலிருந்து 10 கிலோமீட்டர் (ஆறு மைல்) தொலைவில் இந்த தாக்குதல் நடந்தது.
ஜமா இஸ்லாமியாவின் ஆயுதப் பிரிவான ஃபஜ்ர் படை லெபனான் மீதான இஸ்ரேலிய படையெடுப்பை எதிர்த்துப் போராட 1982 இல் நிறுவப்பட்டது.
லெபனானில் ஹமாஸுடன் கூட்டு நடவடிக்கை உட்பட இஸ்ரேலுக்கு எதிரான பல தாக்குதல்களுக்கு இந்தக் குழு பொறுப்பேற்றுள்ளது. இந்த குழுவில் சுமார் 500 ஆண்கள் உள்ளனர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
லெபனானின் அரசு நடத்தும் ஏஎன்ஐ செய்தி நிறுவனம், கியாராவில் கார் ஒன்று குறிவைக்கப்பட்டதில் ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் பாதிக்கப்பட்டவர் அருகிலுள்ள கிராமமான லாலாவைச் சேர்ந்தவர் என்றும் குறிப்பிட்டபோதும், விவரங்கள் தெரிவிக்கவில்லை.
ஹமாஸ் மற்றும் லெபனானில் உள்ள அல்-ஜமா அல்-இஸ்லாமியா ஆகிய அமைப்புகளுக்கு ஆயுதங்களை வழங்கிய அய்மன் கோட்மேஹ்ஹை இலக்கு வைத்து, “லெபனானில் உள்ள பெக்கா பகுதியில் ஒரு விமானம் துல்லியமான தாக்குதலை நடத்தியது” என்று இஸ்ரேல் இராணுவம் கூறியது.
“இஸ்ரேலுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிப்பதிலும் செயல்படுத்துவதிலும் ஈடுபட்டதற்காக” அவர் இலக்கு வைக்கப்பட்டார்.
அல்-ஜமா அல்-இஸ்லாமியா, எந்த மரணத்தையும் உடனடியாக அறிவிக்கவில்லை.
ஏப்ரல் 26 அன்று, கிழக்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டதாக குழு கூறியது.
இஸ்ரேல்-லெபனான் எல்லையில் எட்டு மாதங்களுக்கும் மேலான வன்முறைகள் லெபனானில் குறைந்தது 480 பேரைக் கொன்றுள்ளன. இவர்களில் பெரும்பாலும் போராளிகள் என்றாலும், குறைந்தது 93 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய தரப்பில், குறைந்தது 15 வீரர்கள் மற்றும் 11 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இஸ்ரேல்-லெபனான் எல்லையில் சமீபத்திய நாட்களில் அதிகரித்த பதட்டங்கள் விரிவாக்கப்பட்ட பிராந்திய மோதலுக்கான அச்சத்தை எழுப்பியுள்ளன.