நடப்பு யூரோ கோப்பை தொடரின் ‘குரூப் – ஏ’ பிரிவு ஆட்டத்தில் ஹங்கேரியை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஜெர்மனி. இதன் மூலம் இந்த தொடரில் அடுத்த சுற்றான ரவுண்ட் ஒஃப் 16 சுற்றுக்கு முன்னேறிய முதல் அணியாகி உள்ளது ஜெர்மனி.
ஸ்டட்கார்ட் அரேனாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் தொடக்கம் முதலே ஆக்ரோஷமாக ஆடியது ஜெர்மனி. எதிரணி வீரர்கள் வசமிருந்து பந்தை தட்டிப்பறித்து தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தனர் ஜெர்மனி வீரர்கள்.
ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் முதல் கோலை பதிவு செய்தார் ஜெர்மனி வீரர் மூஸியாலா. அதோடு நிற்காமல் தொடர்ந்து ஹங்கேரியின் தடுப்பாட்ட வீரர்களுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே இருந்தனர் ஜெர்மனி வீரர்கள். அதை சமாளித்தபடி ஹங்கேரி வீரர்களும் தடுப்பாட்டத்தில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே நேரத்தில் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்பை கோலாக மாற்றும் முயற்சியிலும் முனைப்பு காட்டினர். அது ஜெர்மனி அணிக்கு சவால் அளிக்கும் வகையில் இருந்தது.
இந்த சூழலில் இரண்டாவது பாதியில் ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் ஜெர்மனி கேப்டன் குண்டோகன் கோல் பதிவு செய்தார். அதன் மூலம் 2 – 0 என்ற கணக்கில் ஆட்டத்தில் முன்னிலை பெற்றது ஜெர்மனி. இறுதி வரை ஹங்கேரி கோல் எதுவும் பதிவு செய்யவில்லை. ஜெர்மனி வெற்றி பெற்றது.
குரூப் சுற்றின் முதல் போட்டியில் ஸ்கொட்லாந்து அணிக்கு எதிராக 5 – 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றி பெற்றது. இதன் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை அந்த அணி உறுதி செய்துள்ளது.