கடந்த வாரம் செங்கடலில் யேமனின் ஹவுதி போராளிகளால் தாக்கப்பட்ட கிரேக்கத்திற்குச் சொந்தமான ட்யூட்டர் நிலக்கரி கப்பல் மூழ்கியதாக மீட்புப் பணியாளர்கள் புதன்கிழமை உறுதிப்படுத்தினர்.
கடல்சார் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) உள்ளிட்ட ஆதாரங்களின்படி, ஜூன் 12 அன்று ட்யூட்டர் கப்பல் ஏவுகணைகள் மற்றும் வெடிபொருள் நிறைந்த ரிமோட்-கண்ட்ரோல்ட் படகால் தாக்கப்பட்டது. இதை தொடர்ந்து கப்பலுக்குள் தண்ணீர் புக ஆரம்பித்தது.
நவம்பர் முதல் இப்பகுதியில் ஈரானுடன் இணைந்த ஹவுதிகளால் மூழ்கடிக்கப்பட்ட இரண்டாவது கப்பலாக இது நம்பப்படுகிறது என்று UKMTO செவ்வாயன்று கூறியது.
செங்கடல் வழியாக சூயஸ் கால்வாயை அணுகும் சர்வதேச கப்பல்கள் மீதான தங்கள் தாக்குதல்கள் காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவளிப்பதற்காக மேற்கொள்ளப்படுவதாக ஹவுதிகள் கூறுகிறார்கள்.
இரண்டு காப்புக் கப்பல்கள் டியூட்டரை மீட்பதற்காகச் சென்று கொண்டிருந்தன, கப்பல் மூழ்கியதாக நம்பப்படுகிறது என்று அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக மீட்புப்பணியாளர்கள் தெரிவித்தனர்.
செவ்வாய் கிழமை மதியம் லைபீரியா கொடியுடன் கூடிய டியூட்டர் மூழ்கியதாகவும், அந்த இடத்தில் குப்பைகள் மற்றும் எண்ணெய் இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் கடற்படைப் வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அந்தப் பகுதிக்குச் சென்று கொண்டிருந்த கப்பல்களுக்குத் தெரிவித்தன.
“எனவே நாங்கள் பணியை கைவிட்டோம்,” என்று மீட்புப் பணியாளர்கள் தெரிவித்தனர்.
கப்பலில் பிலிப்பைன்ஸை சேர்ந்த 22 பணியாளர்கள் இருந்தனர், அவர்கள் ஜூன் 14 அன்று மீட்பு பணியாளர்களால் காப்பாற்றப்பட்டனர்.
யேமன் ஹொடெய்டா துறைமுகத்திற்கு அருகில் தாக்குதல்கள் இடம்பெற்ற போது ட்யூட்டர் இன்ஜின் அறையில் பணிபுரிந்ததாக நம்பப்படும் குழு உறுப்பினர் ஒருவரைக் காணவில்லை என்று பிலிப்பைன்ஸின் புலம்பெயர்ந்த தொழிலாளர் துறை தெரிவித்துள்ளது.
ஹவுதிகளால் மூழ்கடிக்கப்பட்ட முதல் கப்பல் இங்கிலாந்துக்கு சொந்தமான ரூபிமார் ஆகும்.
ஏவுகணைகளால் தாக்கப்பட்ட சுமார் இரண்டு வாரங்களுக்குப் பிறகு மார்ச் 2 அன்று அது மூழ்கியது.
கடந்த வாரம் ஹவுதிகள் பலாவ் கொடியிடப்பட்ட வெர்பெனாவ் என்ற கப்பல் கடுமையாக சேதப்படுத்தப்பட்டிருந்தது. அதில் மர கட்டுமான பொருட்கள் ஏற்றப்பட்டிருந்தன.
வெர்பெனாவில் இருந்த மாலுமிகள் தாக்குதல்களால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முடியாமல் கப்பலைக் கைவிட்டனர். கப்பல் இப்போது ஏடன் வளைகுடாவில் மூழ்கும் நிலையில் உள்ளது.
ஹவுதி ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் கப்பல் நிறுவனங்களை செங்கடல் மற்றும் சூயஸ் கால்வாயில் இருந்து ஆப்ரிக்காவின் தெற்கு முனையைச் சுற்றி நீண்ட பாதையில் கப்பல்களை திருப்பிவிட நிர்ப்பந்தித்தது, விநியோகம் தாமதம் மற்றும் சரக்கு செலவுகளை உயர்த்தியது.