இலங்கையை அண்மித்துள்ள ஆழமான பிளவுப் பகுதிகளில் இருந்து வெளியேறும் சக்தியினால் வவுனியா பிரதேச மக்கள் உணரும் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாகவும், இது தொடர்பில் தேவையற்ற அச்சம் தேவையில்லை எனவும் பேராதனை பல்கலைக்கழக புவியியல் பேராசிரியர் அதுல சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வவுனியா, மதவாச்சி பிரதேச மக்கள் சுமார் 10 வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான அதிர்வை உணர்ந்துள்ளதாகவும், இன்னும் பல வருடங்களுக்கு அந்த பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும் என கருத முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பூமியானது வருடாந்தம் சுமார் இரண்டு மில்லிமீற்றர் அளவு உயரும் எனவும், அவ்வாறான சந்தர்ப்பங்களில் புவித்தட்டுக்களில் அழுத்தங்கள் வெளியேறுவது வழமையாகக் காணப்படுவதாகக் கூறிய கலாநிதி குறிப்பிட்டார்.
இலங்கையில் இருந்து 1,000 கிலோமீற்றர் தொலைவில் உருவாகி வரும் புதிய தட்டு எல்லையில் இந்த அதிர்வுகள் ஏற்படாததால், இது இலங்கைக்கே உரிய தனிச்சிறப்பு என்பதை தெளிவாகக் கூற முடியும் என்றும் அவர் கூறினார்.
வடக்கு, வடமத்திய மற்றும் மேல் மாகாணத்தில் சில இடங்களில் இந்த நில அதிர்வு நிலை உணரப்பட்டுள்ளதாகவும், பெரிய பாறை அடுக்குகளில் அமைந்துள்ள பகுதிகளில் இந்த அதிர்வுகளை அதிகளவில் உணர முடிவதாகவும் சேனாரத்ன கூறினார்.
பூமியின் உட்பகுதியில் அதிர்வு வெளியேறும் போது வெளிப்படும் ஆற்றலை மண் உறிஞ்சுவதால், மண் அடுக்கு அதிக அடர்த்தி உள்ள பகுதிகள் அதன் விளைவை குறைவாக உணரும் என்றும் அவர் கூறினார்.
ரிக்டர் அளவுகோலில் இரண்டாக பதிவான இந்த நிலநடுக்கங்களால் எந்த பாதிப்பும் ஏற்பட வாய்ப்பில்லை என்றும் அவர் கூறினார்.