கள்ளக்குறிச்சி மாவட்டம் கர்ணாபுரத்தில் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோட்டைமேடு அடுத்த கர்ணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் அருந்தியதாக 74 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், அதே பகுதியை சேர்ந்த பிரவீன் (29), த.சுரேஷ் (46), ம.சுரேஷ் (45),சேகர் (61) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். அதே பகுதியில் அடுத்தடுத்து பலரும் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். பின்னர், அங்கு சிகிச்சை பெற்று வந்தவர்களில் சிலர் புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, சேலம் அரசு மருத்துவமனை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டனர்.
அவ்வாறு அனுமதிக்கப்பட்டவர்களில் மணி (58), கிருஷ்ணமூர்த்தி (62), இந்திரா (38) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சேலம் அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட 7 பேரில் நாராயணசாமி (65), ராமு (50), சுப்பிரமணி (60) ஆகிய 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் (55), ஆறுமுகம் (75), தனகோடி (55), டேவிட் (28) ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
நேற்றிரவு 10 மணி நிலவரப்படி 2 பெண்கள் உட்பட 16 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இன்று (ஜூன் 20) காலை நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளது.
இந்தச் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு மற்றும் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கள்ளக்குறிச்சியில் முகாமிட்டு நிவாரண பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சந்திக்க உள்ளார்.
ஆட்சியர் ஷ்ரவன்குமாரை பணியிட மாற்றம் செய்து புதிய ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்தை தமிழக அரசு நியமித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனாவை பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டதோடு, புதிய எஸ்.பி.யாக ரஜத் சதுர்வேதியை நியமித்துள்ளது.
கள்ளச் சாராய விவகாரத்தை தொடர்ந்து, மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு டிஎஸ்பி தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிச்செல்வி, திருக்கோவிலூர் உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆனந்தன், சிவசந்திரன், காவல் நிலைய எழுத்தரும், சிறப்பு காவல் உதவி ஆய்வாளருமான பாஸ்கரன், திருக்கோவிலூர் டிஎஸ்பி மனோஜ்குமார் ஆகியோரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் அருந்தியவர்கள் உயிரிழந்த செய்திகேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். இந்த குற்றத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தடுக்க தவறிய அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவித்தால், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். சமூகத்தை பாழ்படுத்தும் இத்தகைய குற்றங்கள் இரும்புக்கரம் கொண்டு அடக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு கருணாபுரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதி. இப்பகுதி தொழிலாளர்கள் பலர் வேலை செய்துவிட்டு, உடல் வலியைப் போக்கு மது அருந்துவது வழக்கம். அந்த வகையில் தான் பலர் மது அருந்தி வுந்துள்ளனர். கள்ளச் சாராயம் விலை மலிவு என்பதோடு, அதன் போதை வீரியம் அதிகம் என்பதால் அப்பகுதி மக்கள் கள்ளச் சாரயத்தை வாங்கி பயன்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழிலுக்கு பெயர்போனது என்பது ஊரறிந்த ரகசியம் என்ற போதிலும், அவ்வப்போது போஸீஸார் மதுவிலக்கு சோதனை என்ற பெயரில் பல ஆயிரம் லிட்டர் பேரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கள்ளச் சாராயத்தை கண்டுபிடித்து, அழித்து வந்த போதிலும், அங்கு கள்ளச் சாரயத்தை இதுவரை முற்றிலுமாக அழிக்க முடியவில்லை என்பதே நிதர்சனம்.