சமூக வலைதளங்களில் பவன் கல்யாண் ரசிகர்களின் ட்ரோல்களுக்கு அவரது முன்னாள் மனைவி ரேணுகா தேசாய் பதிலடி கொடுத்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா அடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதனையடுத்து சந்திரபாபு நாயுடு 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். பவன் கல்யாண் துணை முதல்வர் ஆனார்.
இதனை பவன் கல்யாண் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர். இன்னொருபுறம் பவன் கல்யாணை விமர்சிப்பவர்களுக்கு எதிரான ட்ரோல்களும் எல்லை மீறி அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் சமீப நாட்களாக பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணுகா தேசாய் இந்த ட்ரோல்களுக்கு இரையாகியுள்ளார்.
ரேணுகா தேசாயின் இன்ஸ்டாகிராம் பதிவுகளில் பவன் கல்யாண் ரசிகர்கள் தொடர்ந்து அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். சமீபத்தில் ரேணுகாவின் இன்ஸ்டா பதிவொன்றில் கமெண்ட் செய்த பவன் கல்யாண் ரசிகர் ஒருவர், “நீங்க இன்னும் சற்று பொறுமையுடன் இருந்திருக்க வேண்டும் அண்ணி. கடவுள் போன்ற ஒருவரை நீங்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டீர்கள். அநேகமாக நீங்க அவரது மதிப்பை இப்போது உணர்ந்திருப்பீர்கள். ஆனால் குழந்தைகள் பவன் கல்யாணுடன் இருப்பது எனக்கு மகிழ்ச்சி” என்று கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ரேணுகா தேசாய், “ஒரு துளி அறிவு உங்களுக்கு இருந்திருந்தால், இப்படி ஒரு முட்டாள்தனமான கருத்தை கூறியிருக்க மாட்டீர்கள். என்னை விட்டுச் சென்று, மறுமணம் செய்துகொண்டது அவர்தான், நான் அல்ல. தயவுசெய்து இதுபோன்ற கமென்ட்டுகளை தவிர்க்கவும். அவை என்னை மட்டுமே அசிங்கப்படுத்துகின்றன” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.