நடப்பு ரி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் – சி’ பிரிவு ஆட்டத்தில் பப்புவா நியூ கினியா அணிக்கு எதிராக நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சாளர் லாக்கி பெர்குசன், 4 ஓவர்கள் வீசி ரன் ஏதும் கொடுக்காமல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
ரி20 உலகக் கோப்பை வரலாற்றில் வீசிய 24 பந்துகளிலும் ரன் ஏதும் கொடுக்காத முதல் பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். திங்கட்கிழமை அன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பப்புவா நியூ கினியா அணி 19.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
முதல் இன்னிங்ஸின் 5, 7, 12 மற்றும் 14வது ஓவர்களை அவர் வீசி இருந்தார். இந்த போட்டியில் 7 விக்கெட்டுகளில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றது. இருந்தாலும் அந்த அணி நடப்பு உலகக் கோப்பை தொடரில் முதல் சுற்றோடு வெளியேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.
ரி20 கிரிக்கெட்டில் இதற்கு முன்பும் 4 ஓவர்களை மெய்டனாக வீசி உள்ளார் கனடாவின் சாத் ஜாபர். கடந்த 2021இல் பனாமா அணிக்கு எதிராக அவர் அந்த சாதனையை புரிந்திருந்தார். ரி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதற்கு முன்னர் அதிகபட்சம் 2 ஓவர்கள் மெய்டனாக வீசப்பட்டுள்ளது. 2012-இல் இலங்கையின் அஜந்த மென்டிஸ் மற்றும் இந்தியாவின் ஹர்பஜன் சிங் இந்த சாதனையை படைத்துள்ளனர்.