நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய இளைஞரை நடிகர் அடித்துக்கொன்று சாக்கடையில் வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் சித்திரதுர்கா பகுதியை சேர்ந்த இளைஞர் ரேணுகா சுவாமி (வயது 33). இவர் அப்பகுதியில் உள்ள மருந்தகத்தில் வேலை செய்து வருகிறார். இதனிடையே, கடந்த 9ம் தேதி வேலைக்கு சென்ற ரேணுகா சுவாமி வீடு திரும்பவில்லை. இதுகுறித்து ரேணுகா சுவாமியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் பெங்களூருவின் சுமனஹல்லி பாலம் அருகே சாக்கடையில் ரேணுகா சுவாமியின் உடலை சடலமாக மீட்டனர்.
அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன. இதையடுத்து, ரேணுகா சுவாமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் கொலை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.
அப்போது, ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக 3 பேர் போலீசில் சரண் அடைந்தனர். பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக 3 பேரும் தெரிவித்தனர். ஆனால், சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, பிரபல கன்னட நடிகர் தர்ஷனின் உத்தரவிலேயே ரேணுகா சுவாமியை கொலை செய்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து, விசாரணையை போலீசார் மேலும் தீவிரப்படுத்தினர். இந்த கொலை வழக்கு தொடர்பாக நடிகர் தர்ஷனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ரேணுகா சுவாமி கொலை வழக்கில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.
ரேணுகா சுவாமி கொலை வழக்கு தொடர்பான திடுக்கிடும் தகவல்:
பிரபல கன்னட நடிகர் தர்ஷன். இவருக்கு விஜயலெட்சுமி என்பவரும் 2003ம் ஆண்டு திருமணமானது. இந்த தம்பதிக்கு விக்னேஷ் என்ற மகன் உள்ளார். இதனிடையே, பிரபல கன்னட நடிகை பவித்ரா கவுடா. இவருக்கு சஞ்சய் சிங் என்பவரும் திருமணமாகி கவுசி கவுடா என்ற மகள் உள்ளார். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக சஞ்சய் சிங்கை பவித்ரா கவுடா விவாகரத்து செய்தார். பின்னர், நடிகர் பவித்ராவுக்கும், நடிகர் தர்ஷனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த இருவரும் திருமணத்தை மீறிய உறவில் இருந்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் பவித்ரா கவுடா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகள் மற்றும் நடிகர் தர்ஷனுடன் இருக்கும் வீடியோவை வெளியிட்டு 10 ஆண்டுகால உறவு என பதிவிட்டிருந்தார். மேலும், தர்ஷனும் தானும் 10 ஆண்டுகளாக உறவில் இருப்பதாகவும் இது தர்ஷனின் மனைவி விஜயலெட்சுமிக்கும் தெரியும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த விவகாரம் கன்னட திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் மருந்தக ஊழியரான ரேணுகா சுவாமி நடிகை பவித்ராவுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் ஆபாசமாக மெசேஜ் அனுப்பியுள்ளார். மேலும், நடிகர் தர்ஷனை விட்டு விலகும்படியும், தர்ஷனும் விஜயலெட்சுமியும் சேர்ந்துவாழ வழிவிடும்படியும் மெசேஜ் அனுப்பியுள்ளார். தொடர்ச்சியாக, பவித்ராவுக்கு ரேணுகா சுவாமி ஆபாச மெசேஜ் அனுப்பியுள்ளார்.
அந்த நபர் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்புவது குறித்து நடிகை பவித்ரா நடிகர் தர்ஷனிடம் கூறியுள்ளார். இதையடுத்து, பவித்ராவுக்கு ஆபாச மெசேஜ் அனுப்பிய ரேணுகா சுவாமியை தீர்த்துக்கட்ட நடிகர் தர்ஷன் முடிவெடுத்துள்ளார். இதற்காக ரவுடி கும்பலுக்கு பணம் கொடுக்கப்பட்டுள்ளது.
பின்னர், நடிகர் தர்ஷனின் ரசிகரான ரேணுகா சுவாமிக்கு போலி இன்ஸ்டாகிராம் கணக்கு மூலம் பெண் பேசுவதுபோல மெசேஜ் அனுப்பியுள்ளனர். பின்னர் அவரை மைசூரு வரவழைத்துள்ளனர்.
மைசூரு வந்த ரேணுகா சுவாமியை ரவுடி கும்பல் கடத்தியுள்ளது. மைசூருவில் உள்ள பண்ணை வீட்டிற்கு கடத்தி செல்லப்பட்ட ரேணுகா சுவாமியை நடிகர் தர்ஷன் மற்றும் அவரது பாதுகாவலர்கள் சேர்ந்து கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் படுகாயமடைந்த ரேணுகா சுவாமி உயிரிழந்துவிட்டார்.
பின்னர், கொல்லப்பட்ட ரேணுகா சுவாமியை நடிகர் தர்ஷனின் பாதுகாவலர்கள் மற்றும் ரவுடிகள் சேர்ந்து சுமனஹல்லி பாலம் அருகே சாக்கடையில் வீசியது தெரியவந்துள்ளது.
இந்த கொடூர சம்பவத்தில் நடிகர் தர்ஷன், நடிகை பவித்ரா உள்பட 10 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இச்சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.