கடற்படையினர் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் 60 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு, மணற்காடு கடற்கரைப் பகுதியில் சனிக்கிழமை (8) ஒருங்கிணைந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் உதவியுடன் வடக்கு கடற்படை கட்டளைக்கு உட்பட்ட பருத்தித்துறை கடற்படை பிரிவினரால் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மணற்காடு, வல்லிபுரம் கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் காத்திருந்த நபரிடம் விசாரணை நடத்தியதில், அவர் அளித்த தகவலின் அடிப்படையில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதை தேடுதல் குழுவினர் கண்டுபிடித்தனர். இரண்டு சாக்கு மூட்டைகளில் அடைக்கப்பட்ட 29 பொதிகளில் சுமார் 60 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சா மீட்கப்பட்டது.
இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ரூ. 24 மில்லியன்.
சந்தேகநபர் யாழ்ப்பாணம் தாளையடியைச் சேர்ந்த 24 வயதுடைய அருளானந்தம் அன்ரனி ரெக்ஸ் என்பவராவார்.
சந்தேகநபர் கஞ்சாவுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.