வடக்கு மாகாணத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள 3 நாள் பயணமாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
இன்று யாழ்ப்பாணத்தில் 3 நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அண்மையாக, யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் மருத்துவபீட கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது. பின்னர், தந்தை செல்வா அரங்கில், காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வும், துரையப்பா அரங்கில் இளைஞர் சேவை மன்ற நிகழ்வும் நடந்தன.
யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிட திறப்பு விழாவின் போது, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரசிங்க உரையாற்றிய போது, ஜனாதிபதி ரணில் இந்த ஆண்டில் கொழும்பு பல்கலைகழகத்துக்கு சென்றதைவிட, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கே அடிக்கடி சென்றதாக குறிப்பிட்டார். அண்மையில் 4 முறை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்துக்கு சென்றதாக குறிப்பிட்டார்.
அதன் பின்னர் உரையாற்றியவர்களும் ஜனாதிபதி ரணிலை புகழ்ந்து உரையாற்றினார்கள்.
இலங்கை தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றிய போது, 2005 தேர்தலில் வடக்கில் தேர்தலை புறக்கணித்திருந்தனர். அதனால் பல விளைவுகள் ஏற்பட்டது. அந்த அனுபவத்தினாலும் ஜனாதிபதி தற்போது அடிக்கடி வடக்குக்கு வரக்கூடும். எப்படியோ, அவரது வருகையில் அரசியல் இல்லாமலிருந்தால் நல்லது என்றார்.




