♦கருணாகரன்
இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் தொடர்ந்தும் பயணிக்க முடியாது என்றே சுரேஸ் பிரேமச்சந்திரன் (ஈ.பி. ஆர்.எல்.எவ்) சித்தார்த்தன் (புளொட்) செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ) ஆகியோர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி, ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை (DTNA) உருவாக்கினார்கள். இவர்களோடு தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன்), ஜனநாயகப் போராளிகள் ஆகிய தரப்பினரும் இணைந்து நின்றனர்.
கூட்டமைப்புக்குள் முடிவற்று நீண்டுகொண்டிருந்த இழுபறிகள், உள்முரண்பாடுகள், ஜனநாயக விரோதப் போக்கு போன்றவற்றுக்கு மாற்றாக, இதொரு நல்ல தீர்மானம் எனப் பலரும் கருதினர். கூட்டமைப்பின் மந்தமான, குழப்பகரமான அரசியல் நிலைப்பாட்டுக்கும் இதொரு நல்ல முடிவாக அமையக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அத்துடன், தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு (இனப்பிரச்சினை, சமூக, பொருளாதாரப் பிரச்சினை உட்பட அனைத்துக்கும்) தீர்வை எட்டுவதற்கு ஒரு சரியான கட்டமைப்பும் மாற்று அரசியலும் வேண்டும் எனவும்.
DTNA இன் உருவாக்கம் 2023 இல் நிகழ்ந்தது. கூட்டமைப்பின் தடுமாற்றங்களிலிருந்து விடுபட்டு, தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப் பிரச்சினையைத் தீர்ப்பதில் புதியதொரு வழிமுறையைக் காண்பதாக இருக்கும் என நம்பப்பட்டது.
இதற்குக் காரணம், DTNA இல் அங்கத்துவம் வகிக்கும் கட்சிகளான ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் ஆகியன ஆயுதப்போராட்ட அரசியலிலும் ஜனநாயக வழிமுறை அரசியலிலும் ஈடுபட்ட அனுபவத்தைக் கொண்டவை. அவற்றின் தலைவர்களுக்கு இவை இரண்டிலும் தொடர்ச்சியான அரசியல் அனுபவமுண்டு. ஆகவே இரண்டு அனுபவங்களின் வழியாகவும் புதிய அரசியலை – குறிப்பாகச் செயற்பாட்டு அரசியலை – DTNA யினால் முன்னெடுக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது.
2009 க்கு முன்னர் புலிகள் இந்தத் தரப்பை சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்கவில்லை. 2009 க்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் தமிழரசுக் கட்சி கட்டுப்படுத்தியது. இப்பொழுது இந்தத் தடைகள் எல்லாம் இல்லை. எனவே செயற்பாட்டு அரசியலை நோக்கி DTNA திரும்பும் எனக் கருதப்பட்டது.
தமிழ்ப்பரப்பில் செயற்பாட்டு அரசியலை தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் முன்னெடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் கவலையும் மக்களிடம் இருந்தது. போராட்ட அரசியலுக்கு முன்னரும் பின்னரும் செயற்பாட்டு அரசியல் இல்லை. இரண்டு காலகட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்திய தமிழரசுக் கட்சியிடத்திலும் தமிழ்க் காங்கிரஸிடமும் செயற்பாட்டு அரசியற் பாரம்பரியமோ அனுபவமோ கிடையாது. ஆனால், விடுதலைப் போராட்ட இயக்க அனுபவங்களுக்கூடாகப் பயணித்த ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் போன்றவற்றுக்குச் செயற்பாட்டு அரசியற் பாரம்பரியம் இருந்தது.
ஆகவே ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செயற்பாட்டு அரசியலை முன்னெடுக்கும். அது கற்பனாவாத (மிதவாத) அரசியலில் இருந்து விடுபட்டு, நடைமுறை அரசியலை, மக்களுக்கான அரசியலை நோக்கிப் பயணிக்கும் என்று வலுவாக எதிர்பார்க்கப்பட்டது. தேர்தல் அரசியலோடு, மக்கள் அமைப்புகளைக் கட்டியெழுப்பி விடுதலைக்கான பணிகளையும் மேற்கொள்வர் என.
ஆனால்? தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு (DTNA) இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது?
தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு (இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு) மாற்றாக – புதியதாக – அது உள்ளதா? அதற்கான அடிப்படிகளை DTNA உருவாக்கியுள்ளதா?
இல்லை என்பதே இதற்கான கசப்பான பதிலாகும்.
TNA யிலிருந்து வெளியேறியதற்குப் பின்னர், சொல்லிக் கொள்ளும் அளவுக்கு DTNA இன்னும் தன்னைத் தனித்த அடையாளமாகக் காட்டவில்லை. அதாவது, கொள்கை ரீதியாகவும் கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றிலும் தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட வேறுபட்டதாக உணர முடியவில்லை. ஏன் ஏனைய தமிழ்த்தேசியக் கட்சிகளுக்கும் DTNA க்கும் இடையில் எந்த வேறுபாடுகளையும் உணர முடியவில்லை. மட்டுமல்ல, ரெலோவுக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் இடையிலும் வேறுபாடுகள் இல்லை. புளொட்டுக்கும் ரெலோவுக்கும் இடையில் எந்தத் தனித்துவமும் கிடையாது. அப்படித்தான் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் புளொட்டுக்கும் இடையிலும் தனித்துவ அடையாளங்கள் என்று ஏதுமில்லை. ஆனால் இவை அனைத்துக்கும் அவ்வாறான சிறப்படையாளங்களும் செயற்பாட்டு முறைகளும் இருந்தன.
ஏன் அதெல்லாம் காணாமற்போனது?
இந்தப் பின்தங்கிய நிலை தொடருவதற்கான காரணம் என்ன?
தமிழரசுக் கட்சியைப்போலவே DTNA யும் தன்னுடைய அரசியலை நோகாமல் முன்னெடுக்கிறது. ஊடகச் செய்திகள், கண்டன அறிக்கைகள், பாவ்லாப் போராட்டங்கள், ஊடக மையத்தில் சந்திப்புகள் என்ற பழைய சுழலுக்குள்ளேயே அது நின்றாடுகிறது. வெளியில் இறங்கி, மக்களுக்கான செயற்பாட்டு அரசியலையும் யதார்த்த அரசியலையும் அது முன்னெடுப்பதற்குத் துணியவில்லை. அதற்கான கொள்கை, கட்டமைப்பு, நடைமுறைகள், செயற்பாட்டு அணிகள், வேலைத்திட்டம் என எதையும் அது வரையவில்லை. முன்னெடுக்கவும் இல்லை. மெய்யாகவே யதார்த்தமான – முற்போக்கான அரசியலை முன்னெடுக்க விரும்புவோரை இணைத்துக் கொள்வதற்கு அது முயற்சிக்கவில்லை. அரசியல் அறிவுசார் உரையாடல்களையும் விவாதங்களையும் கட்சிகளின் மட்டத்திலும் மக்கள் மத்தியிலும் நடத்துவதற்கு விளையவில்லை. பதிலாகத் தமிழரசுக் கட்சியைப்போல அல்லது கூட்டமைப்பில் இருந்ததைப்போலவே பிரமுகர் அரசியலையும் அரச எதிர்ப்பு அரசியலையும் மட்டும் அச்சுப் பிசகாமல் செய்கிறது ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு.
இதற்குக் காரணம், அதனிடம் புதிய அரசியற் சிந்தனையை முன்னெடுக்கக் கூடிய துணிவும் அறிதிறனும் இல்லை என்பதேயாகும். இலங்கைத்தீவின் வரலாற்று யதார்த்தத்தின் அடிப்படையிலும் சமகால நிலவரம், எதிர்கால வாழ்க்கை என்ற தேவைகளின்பாற்பட்டும் புதிய சர்வதேச அரசியல் ஒழுங்கின் அடிப்படையிலும் வெற்றிகரமான அரசியலைத் தொடங்குவதற்கு அதனால் முடியாமலிருக்கிறது.
இப்போதுள்ளது சிறிசபாரத்தினத்தின் ரெலோவா அல்லது பிரபாகரனின் ரெலோவா என்றொருவர் ஒரு அரசியல் உரையாடலின்போது கேட்டார்.
இந்தக் கேள்வி ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் போன்றவைக்கும் உரியனவே.
தமிழரசுக் கட்சியை (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை) விட்டு வெளியேறிய பின் DTNA இன் புதிய செயற்பாட்டுப் பரப்பு, புதிய செல்வாக்குப் பரப்பின் விரிவாக்கம் எதுவாக உள்ளது?
DTNA இன் புதிய பெறுமானங்கள், அது பெற்றுக் கொண்ட – உருவாக்கிய நல்லடையாளங்கள் என்ன?
இந்தக் கேள்விகளையெல்லாம் DTNA விடம் ஏன் எழுப்ப வேண்டியிருக்கிறது என்றால் –
1. ஏறக்குறைய 20 ஆண்டுகளாகச் செயற்பட்டு வந்த ஒரு (TNA) கட்டமைப்பிலிருந்து வெளியேறி, புதிய அணியாக DTNA செயற்படுவதாக இருந்தால் நிச்சயமாக முன்னதற்கும் பின்னதற்குமான வேறுபாட்டை அது காண்பிக்க வேண்டும். அரசியல் ரீதியாகவும் அதை முன்னெடுத்துச் செல்லும் அணுகுமுறைகள் எப்படியானவை எனவும் காட்ட வேண்டும். அப்பொழுதுதான் இரண்டுக்குமிடையிலான அரசியல் வேறுபாட்டை (ஆறு வித்தியாசங்களைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டாம், ஒரு வித்தியாசத்தையாவது காண வேண்டும்) மக்களுக்கு உணர்த்துவதோடு, பிரிந்து சென்று புதிதாக இயங்குவதற்கான நியாயத்தையும் சொல்வதாக இருக்கும்.
2. குறிப்பிட்ட அளவுக்கு அவ்வப்போது தமிழரசுக் கட்சியை விமர்சிக்கிறது DTNA. அதேவேளை அது மீண்டும் தமிழரசுக் கட்சியோடு (தமிழ்த்தேசியக் கூட்டமைப்போடு) இடைநிலைச் சமரசத்துக்கும் உள்ளுர முயற்சிக்கிறது. இந்தத் தத்தளிப்பு நிலை அல்லது தடுமாற்றம் ஏன்?
ஏனென்றால், DTNA உம், தமிழரசுக் கட்சியைப் போலச் செயற்பாட்டு அரசியலை விட்டு, பிரமுகர் அரசியலிலும் முற்று முழுதான கற்பனாவாத அரசியலிலும் மூழ்கிப்போயுள்ளது. தேர்தலை எதிர்கொள்வதற்கான பிரதிநிதிகளை கட்சியிலிருந்து தேர்ந்தெடுப்பதற்கும் உருவாக்குவதற்கும் பதிலாக, வெளியே இருந்து பிரமுகர்களைத் தேடுவது இந்தக் கட்சிகளின் வழமை. இதனால் அந்தப் பிரமுகர்களின் பின்னால் இந்தக் கட்சிகள் இழுபடுவதும் அது முடியாதபோது தாம் தெரிவு செய்து வெற்றியடைய வைத்த பிரமுகர்கள் இவர்களுக்குப் பின்பக்கத்தைக் காட்டி விட்டு தமிழரசுக் கட்சிக்குத் தாவிச் சென்று விடுகிறார்கள். அல்லது தனிக்கட்சி ஆரம்பித்து இவர்களுக்கு வித்தை காட்டுகிறார்கள். அரசியல் வாடையே தெரியாதிருந்த விக்னேஸ்வரன், ஐங்கரநேசன் எல்லாம் இப்பொழுது கட்சித்தலைவர்கள். (எமது போராட்டத் தலைவர்கள் இப்போது செய்து கொண்டிருப்பதெல்லாம் புதுப்புதுக் கட்சிகளை உருவாக்குவதற்கான ஆட்களைக் கண்டு பிடித்து, அவர்களை தலைவர்களாக்குவதும், பிறகு, அந்தப் புதுத்தலைவர்களுக்குப் பின்னால் இழுபடுவதுமே) 😳 நாற்பது ஆண்டுகளுக்கு மேலான அரசியல் அனுபவத்தைக் கொண்ட இந்தத் தலைவர்களுக்குப் புதுத் தலைவர்கள் சமதையாக நிற்கிறார்கள். விதியே விதியே என்ன செய்வாய் இதை எண்ணி?
3. தமிழரசுக் கட்சியைப்போலவே தமது அரசியலையும் சிந்திப்பது, அதை முன்னெடுப்பது என தமிழரசுக் கட்சியின் நிழற்பிரதிகளாகவே இவை உள்ளன. அதனால்தான் கூட்டமைப்பிலிருந்து பிரிந்தாலும் பிரியாத இந்த உணர்வுத் ததும்பல். அண்மைய உதாரணம், தமிழ்ப்பொது வேட்பாளர் விவகாரத்தை முன்னெடுக்கிறது DTNA. ஆனால், அதற்குள்ளிருக்கும் ரெலோ சொல்கிறது, “தமிழரசுக் கட்சி என்ன முடிவு எடுக்கிறதோ, அதைப் பார்த்தே நாம் எங்களுடைய முடிவுகளைச் சொல்வோம் என. இதற்கு என்ன பொருள்?
என்பதால்தான் கொள்கை, கட்டமைப்பு, செயற்பாட்டுமுறை, அணுகுமுறை போன்றவற்றால் DTNA வினால் தனித்துவப்படுத்திக் காண்பிக்க முடியவில்லை. ஒன்று மோதகம் என்றால் மற்றது கொழுக்கட்டை என்றிருக்கிறது.
4. இதனை மறைத்துக் கொள்வதற்காக அது தீவிர அரசியலைப் பேச முற்படுகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான பொதுவேட்பாளர் என்ற கதையாடலே தமிழ்த்தேசிய அரசியலின் அடுத்த கட்டம் என்ன என்று தெரியாத தடுமாற்றத்தின் விளைவுதான். அதொன்றும் புதிய கண்டுபிடிப்பும் அல்ல, தமிழ் மக்களுடைய அல்லது தமிழ் பேசும் மக்களுடைய அரசியல் மீட்சிக்கான வழிமுறையும் அல்ல. சிறுபிள்ளை விளையாட்டு.
மட்டுமல்ல, தீவிர அரசியலை முன்னெடுப்பதன் மூலமாக தமிழ் மக்களுக்கு எதிர்மறையான விளைவுகளே ஏற்படும் என்று தெளிவாகத் தெரிந்து கொண்டே, அதனுடைய தலைவர்கள் அதிதீவிர அரசியலை முன்னெடுக்கின்றனர். இந்த அதிதீவிர அரசியல் தமக்குரிய அதிகாரத்தையும் எதிர்காலத்தையும் தமிழ்ச்சமூகத்திடமிருந்து பெற்றுத் தரும் என்றும் நம்புகிறார்கள். ஆனால், அதைப் பேசுவதற்கும் அந்த வழியில் செயற்படுவதற்கும் கஜேந்திரகுமாரின் அணியும் சிறிதரன், அரியநேத்திரன் போன்றோரின் அணியும் இருக்கிறதே.
பிறகேன் இவர்கள் (DTNA)?
தேவையேற்பட்டால் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் இணைந்து செயற்படத் தயார் என DTNA இன் தரப்பிலிருந்து சித்தார்த்தன், செல்வம் போன்றோர் சொல்லியிருக்கின்றனர். அதாவது, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுவதற்கு ஒற்றுமையாக – ஐக்கியப்பட்டுச் செயற்பட வேண்டிய அவசியமுள்ளது. அதற்காகவே இப்படிச் சிந்திக்கிறோம் என்கிறார்கள்.
அப்படியென்றால், பிரிந்து செல்வதற்கு காரணமாக இருந்த நிலவரங்களை தமிழரசுக் கட்சி சீராக்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. அப்படியிருக்கும்போது எதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்புடன் மீளிணைவைப் பற்றி DTNA சிந்திக்கலாம்? அப்படியாயின் தனித்து இயங்குவதில் DTNA க்கு உள்ள தயக்கம் – அச்சம்தான் காரணமாக இருக்க வேணும். நிச்சயமாக. இன்னும் மக்கள் DTNA ஐ பிறிதொரு சக்தியாக அடையாளம் காணவில்லை. ஒரு தேர்தல் வருவதற்கு முன்பு, மக்களிடம் கணிப்பீடு வரமுன்னர் எப்படி இப்படிச் சொல்லமுடியும்? என்று DTNA தரப்பில் கேள்வி எழுப்பப்படலாம். தமது கூட்டணிக்குப் பெயர் சூட்டப்பட்ட விதத்திலிருந்து, முன்னெடுக்கப்படும் அரசியல், அவ்வப்போது கூட்டமைப்பு – தமிழரசுக் கட்சியினருடனான பொது நிகழ்வுப் பங்கேற்புகள் வரையில் DTNA தனித்துத் தன்னை உருவாக்கிக் கொள்வதற்குப் பதிலாக தான், இன்னும் கூட்டமைப்பின் நிழலாக இருக்கிறேன் என்றே காட்ட முற்படுகிறது. தனித்து DTNA என நின்றால், நிரந்தரமாகப் பின்னடைவைத் தந்து விடுமோ என்ற அச்சம் அதற்குண்டு.
இந்த அச்சத்துக்குக் காரணம், DTNAதான். ஏனென்றால், தமிழ் அரசியல் அரங்கில் விடுதலைப்புலிகள் இல்லாது போன 2009 க்குப் பிறகான 15 ஆண்டுகளிலும் DTNA இன் கட்சிகளால் (இயக்கத்தினரால்) ஒரு புதிய அரசியலை, தங்களுடைய தனித்துவ அடையாளத்துடன் முன்னெடுக்க முடியவில்லை. அப்படிச் செய்வதற்கு முன்பு புலிகள் தடையாக இருந்தனர். அனுமதிக்கவில்லை என்று சொல்லலாம். 2009 க்குப் பிறகு அப்படிச் சொல்ல முடியாது. மட்டுமல்ல, தமிழரசுக் கட்சியைக் கூட DTNA உள்ளிட்ட பிற சக்திகள் எதனாலும் கட்டுப்படுத்த முடியவில்லையே. அதை மேவிச் செல்லவும் முடியவில்லையே. இதெல்லாம் DTNA குறைபாடு அல்லது பலவீனமன்றி வேறென்ன?
5. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு இப்பொழுது வெறும்கோது மட்டுமே. அதிலிருந்து அனைத்துத் தரப்பினரும் வெளியேறி விட்டனர். தமிழரசுக் கட்சி மட்டுமே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்ற லேபிளில் இன்னும் தொங்கிக் கொண்டிருக்கிறது. அதுவும் பிளவுண்டு சிதையக் கூடிய நிலையில். உள்முரண்பாடுகள் முற்றி நீதிமன்றம் வரையில் சென்றுள்ளது. இந்த வாய்ப்பான சூழலில் DTNA தன்னைப் பலப்படுத்திக் கொள்ள முடியும். தனக்கு வெளியே உள்ள நேசச் சக்திகளையும் இணைத்துக் கொள்ளலாம். தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் சமரசம் செய்வதற்கு முயற்சிப்பதை விட அதற்கு வெளியே உள்ள சக்திகளை இணைத்துத் தன்னை விரிவாக்கம் செய்வதே பயனுடையது. ஆனால், அது அப்படிச் செய்யவில்லை. அதில் அக்கறை கொண்டுள்ளதாகவும் தெரியவில்லை.
இது ஏன்?
6. தமிழரசுக் கட்சியை DTNA இன்னும் விமர்சிப்பதற்குக் காரணம், அதில் முன்னணிப்பாத்திரம் வகிக்கின்ற – எதிர்காலத்தில் முன்னணியில் திகழப்போகின்ற – சுமந்திரன், சிறிதரன் போன்றோருடன் DTNA வினரால் உடன்பட்டுப்பயணிப்பதில் உள்ள நெருக்கடியே! இந்த விமர்சனத்தைக் கூட சுரேஸ் பிரேமச்சந்திரனும் ரெலோவின் பேச்சாளர் சுரேன் குருசாமி போன்றோரும்தான் செய்கின்றனர். அபூர்வமான சந்தர்ப்பங்களில் செல்வம் அடைக்கலநாதன் ஏதாவது சொல்வார். சித்தார்த்தன் எதுவுமே பேசுவதில்லை. மௌனத்தேவனாகவே கண்களை மூடி, ஆழ்ந்த தியானத்திலிருந்து விடுவார்.
ஆனால் DTNA என்ற வகையில் தமிழரசுக் கட்சி மீதான விமர்சனங்களுக்கு அனைவரும் உடன்பாடு கொண்டேயுள்ளனர். அந்தளவுக்குக் கசப்பான அனுபவங்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு.
முக்கியமாகச் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றோரை விடச் சிறிதரனும் சுமந்திரனும் அரசியல் வரலாற்றில் ஜூனியர்கள். ஜூனியர்களாக இருந்தாலும் ஏனையவர்களை விட இருவரும் செல்வாக்கோடும் அரசியல் அதிகாரத்தோடும் தற்போதுள்ளனர். கூட்டமைப்பில் இவர்கள் எல்லோரும் இணைந்திருந்த காலத்திற் கூட சுமந்திரனும் சிறிதரனும் ஏனையவர்களை மிஞ்சும் வகையிலேயே, அவமதிக்கும் வகையிலேயே நடந்து கொண்டனர். சிறிதரன் பல சந்தர்ப்பங்களிலும் ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட், ரெலோ ஆகியவற்றைக் கடுமையாக விமர்சித்திருக்கிறார், சாடியிருக்கிறார். கிளிநொச்சியில் இந்தக் கட்சிகளின் செயற்பாட்டை முற்றாக மட்டுப்படுத்தும் விதமாக நடந்து கொண்டுமிருந்தார். அத்துடன், தன்னை விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளராகவும் தொடர்ச்சியாகவும் காட்ட முற்படும் சிறிதரனுக்கு ஏனையவர்களை, விடுதலைப்புலிகளுக்கு எதிராகச் செயற்பட்டவர்கள், அரசாங்கத்தின் கைப்பொம்மைகளாக இருந்தவர்கள் என்ற கடந்த கால வரலாற்றைத் தோண்டியெடுத்து முன்னிறுத்த வேண்டிய அவசியம் தொடர்ந்தும் இருக்கிறது.
சுமந்திரனுக்கு இது வேறு வகையில் இருந்தது. அவர் சம்மந்தனின் தொடர்ச்சியாக ஐக்கிய இலங்கைக்குள் அனைத்துச் சமூகத்தினருடனும் இணைந்து பெறக் கூடிய தீர்வொன்றைப் பற்றியே சிந்தித்தும் பேசியும் வந்தார். இதனால் சம்மந்தன் சந்தித்த கடுமையான விமர்சனத்தையும் அரச ஒத்தோடி என்ற குற்றச்சாட்டையும் சுமந்திரனும் ஏற்க வேண்டியதாகியது. இது தமது கடந்த கால வரலாற்றின் கசப்பான நிழலை மறைத்து அரச எதிர்ப்பு – தமிழ்த்தேசிய அரசியலைத் தீவிர நிலையில் முன்னெடுக்கும் சுரேஸ், செல்வம் போன்றோருக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. அடுத்ததாக, கூட்டமைப்பில் இணைந்திருக்கும் நான்கு கட்சிகளுக்கும் சமநிலையான அடையாளத்தையும் உரிமையையும் வழங்குவதற்குச் சுமந்திரன் ஏற்புடையவராகவும் இருக்கவில்லை. எதிர்காலத் தலைமைப் பதவியை இருவரும் குறிவைத்ததே இதற்குப் பிரதான காரணம். என்பதால் தமிழரசல்லாத ஏனையவர்கள் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு – அனுசரித்து – நடக்க வேண்டும் என்று சிறிதரன், சுமந்திரன் உள்ளிட்ட சம்மந்தன், மாவை சேனாதிராஜா வரையில் அனைவரும் நடந்து கொண்டனர். அதாவது தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு, அதை அனுசரித்து ஏனையவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என்றவிதமாகச் செயற்பட்டனர்.
இதையெல்லாம் முறியடிக்கக் கூடிய ஒரு செயற்திட்டத்தைக் கூட DTNA முன்பும் உருவாக்கவில்லை. வெளியேறிய பின்னும் செய்யவில்லை. பதிலாக அது கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சிறிதரன் போன்றோரின் அதிதீவிர அரசியலின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறது. அப்படிப் பின்னோடி எந்தப் புதிய சாதனைகளையும் DTNA வினால் நிகழ்த்த முடியாது. நிச்சயமாக தன்னை இழப்பதில்தான் அது போய் முடியும். குறைந்த பட்சம் தம்முடைய முன்னோடித் தலைவர்கள் பத்மநாபா, உமா மகேஸ்வரன், சிறிசபாரத்தினம் போன்றோரின் அரசியற் தொடர்ச்சியையாவது பேண முற்படலாம். அதை விஞ்ஞானபூர்வமான, சமகாலத்தன்மையுடைய அரசியலொன்றைப் பகுத்தாய்ந்து முன்னெடுக்கும் விதமாக.
காலம் எதிர்பார்த்து நிற்பது அதையே. அதையே DTNA செய்ய வேண்டும். அல்லது, அதுவும் வரலாற்றின் குப்பைத் தொட்டிக்குள்தான் தள்ளப்படும்.
00