யாழ்.போதனா வைத்தியசாலையில் சிசுவை பிரசவித்த பின்னர் , சிசுவை வைத்தியசாலையில் கைவிட்டு சென்ற 15 வயதான பாடசாலை மாணவியை பொலிஸார் மீட்டுள்ளதுடன், மாணவியை வன்புணர்ந்து கர்ப்பமாக்கிய குற்றச்சாட்டில் 25 வயதான இளைஞனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்.போதனா வைத்தியசாலையில் 15 வயதான பாடசாலை மாணவி பிரசவத்திற்காக கடந்த வாரம் மாலைப்பொழுதொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தாயாரும் மாணவிக்கு உதவியாக நின்றுள்ளார். மாணவிக்கு குழந்தை பிறந்ததும் மறுநாள் காலையில், தாயும் மாணவியும் குழந்தையை வைத்தியசாலையில் கைவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தினர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் சிறுமி நெல்லியடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் என கண்டறிந்து, அது தொடர்பில் நெல்லியடி பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், குழந்தையை பிரசவித்த மாணவியையும் , அவரது தாயாரையும் கண்டறிந்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர்.
துன்னாலை மேற்கை சேர்ந்த மாணவியே குழந்தை பிரசவித்துள்ளார்.
விசாரணைகளின் அடிப்படையில் , மாணவியை வன்புணர்வுக்கு உட்படுத்தி, கர்ப்பமாக்கிய மன்னாரை சேர்ந்த 25 வயதான இளைஞனை கைது செய்துள்ளனர்.
அந்த இளைஞன் தனது தாயாருடன் பழக்கமானவர் என்றும், தாயாரிடம் வந்து தங்கியிருந்த சமயத்தில் அவருடன் எதார்த்தமாக பழகியதாகவும், தன்னுடனும் உறவு வைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
வைத்தியசாலையில் குழந்தை பிரசவித்த பின்னர் சொப்பிங் பையில் குழந்தையை எடுத்ததாகவும், குழந்தை இறந்து விட்டதென தான் நினைத்ததாகவும், மறுநாள் காலையில் தாயார் தன்னை அழைத்து வந்துவிட்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார்.
சிறுமியிடமும், தாயாரிடமும் பொலிசார் வாக்குமூலம் பதிவு செய்தனர். சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞனின் நேற்று பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு, எதிர்வரும் 21ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.