“தெலுங்கு படத்தில் நடிக்கும்போது, உங்களை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். திரையில் எப்படியிருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது கவனித்துக் கொண்டும், அலங்கரித்துக் கொண்டும் இருக்க வேண்டும். அது எனக்கு வசதியாக இல்லை” என நடிகை சம்யுக்தா தெரிவித்துள்ளார்.
நேர்காணல் ஒன்றில், மூன்று தென்னிந்திய திரையுலகில் நீங்கள் கண்ட வித்தியாசம் என்ன? என்று சம்யுக்தாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், “மலையாள படங்களில் நடிக்கும்போது இயற்கைக்கு மிக நெருக்கமான எந்தவித அதீத மேக்அப்பும் இல்லாமல் நடிப்போம். அங்கே எனக்கு சுதந்திரம் இருந்தது.
ஆனால், தெலுங்கில் நீங்கள் நடிக்கும்போது, உங்களை நீங்களே பார்த்துக் கொள்ள வேண்டும். திரையில் எப்படியிருக்கிறீர்கள் என்பதை அவ்வப்போது கவனித்துக் கொண்டும், அலங்கரித்துக் கொண்டும் இருக்க வேண்டும். அது எனக்கு சவுகரியமாக இல்லை.
நான் நடிப்பில் கவனம் செலுத்தி வசனங்களை மனப்பாடம் செய்து ஷாட்டுக்கு தயாராகியிருப்பேன். அப்போது என்னுடைய சேலை சரியில்லை என உடை அலங்காரம் செய்பவர் அங்கிருந்து வருவார். சொல்வதற்கு நகைச்சுவையாக இருக்கும் ஆனால் அது உண்மையில் அவ்வளவு எளிதானதல்ல. அதனால் என் நடிப்பில் இருக்கும் கவனம் சிதறிவிடும். மலையாள சினிமாவில் மேக்அப் இல்லாமல் நடித்துப் பழகியிருந்தேன். அது தான் எனக்கு மிகவும் வசதியாக இருந்தது” எனத் தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான ‘வாத்தி’ படத்தின் மூலம் கவனம் பெற்றவர் சம்யுக்தா, மலையாளத்தில் மோகன்லால் நடித்து வரும் ‘ராம்’ படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.