பதுளை – மஹியங்கனை வீதியின் புவக்கொடமுல்ல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் முச்சக்கரவண்டியும் மோதியதில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
தெஹியத்தகண்டிய டிப்போவுக்குச் சொந்தமான பஸ் ஒன்று தெஹியத்தகண்டிய சிறிபுரவிலிருந்து பதுளை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது அதற்கு முன்னால் பதுளையிலிருந்து ரிதிபன நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியின் குறுக்கே நாய் ஒன்று குதித்து ஓட முற்பட்ட போது, முச்சக்கர வண்டிச்சாரதி நாயுடன் விபத்தை தவிர்க்க முற்பட்ட போது, எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
முச்சக்கர வண்டியில் பயணித்த 79 வயதான ஒருவர் உயிரிழந்ததுடன், பெண் ஒருவரும் மூன்று ஆண்களும் காயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் முச்சக்கரவண்டிக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், பஸ்ஸின் அடிப்பகுதியும் சேதமடைந்துள்ளது.
விபத்து தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.