இப்பொழுது உருவாகியிருக்கும் பொதுவேட்பாளர் கோசம் எழுந்த காலப்பகுதிக்கு கிட்டவாக, கிளிநொச்சியில் உள்ள ஒரு பாடசாலையின் பழைய மாணவர் நிர்வாக தெரிவு நடந்தது. அதில் இரண்டு அணிகள் உருவாகியிருந்தன. இரண்டு அணிகளும் தீயாக வேலையும் செய்தன.
நிர்வாக தெரிவுக்கு கிட்டவான நாளென்றில், ஒரு அணியினர் சார்பில்- பழைய மாணவர்கள் அனைவருக்கும் மின்னஞ்சலொன்று அனுப்பப்பட்டிருந்தது. அதில், தமது தரப்ப ஏன் வெற்றியீட்ட வேண்டுமென்பதற்கான காரணங்களை பட்டியலிட்டுள்ளனர்.
11 காரணங்களை கொண்ட அந்த பட்டியலில் 3வதாக குறிப்பிடப்பட்டிருந்தது- இந்த பழைய மாணவர் நிர்வாக தெரிவு சர்வதேசத்துக்கும் ஒரு செய்தியை சொல்லும் என்பதாகும். அதாவது, கிளிநொச்சியில் ஆதிக்கம் செலுத்தும் இரண்டு கட்சிகளின் சார்பான பழைய மாணவர்கள் அணிகளுக்கு இடையிலான போட்டியில், தற்போது நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்ட கட்சி தோல்வியடைந்தால், அந்த பாடசாலை அரச தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ளதென நினைத்து வெளிநாட்டு உதவித்திட்டங்கள் கிடைக்காது, புலம்பெயர் தமிழர்கள் உதவமாட்டார்கள் என்பதே அவர்களின் விளக்கம்.
ஈழத்தமிழர் அரசியலில் சர்வதேச சமூகத்துக்கு செய்தி சொல்ல வாக்களிப்பது, சர்வதேச சமூகத்துக்கு செய்தி சொல்ல வாக்களிக்காமல் இருப்பது, சர்வதேச சமூகத்துக்கு செய்தி சொல்ல வீதியில் பேரணி செல்வது, சர்வதேச சமூகத்துக்கு செய்தி சொல்ல கடைகளை பூட்டி விட்டு வீட்டில் இருப்பது எல்லாம் அமாவாசை, பௌர்ணமி போல அடிக்கடி கிரமமாக நடக்கும் சங்கதிகள்தான்.
இதனால்தான், “சர்வதேசத்துக்கு செய்தி சொல்ல வேண்டும்“ என யாரும் ஆரம்பித்தாலே, மக்களுக்கு அலர்ஜி வர ஆரம்பிக்கிறது.
அண்மைய காலங்களில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், அமெரிக்காவின் உயர்மட்ட தரப்புக்கள், இலங்கைக்கான அமெரிக்க தூதர் உள்ளிட்டவர்கள் தமிழ் தேசிய அரசியல் கட்சிகளுடன் நடத்திய பேச்சுக்களில் எல்லாம் பிரதானமாக- மிக தெளிவாக- வலியுறுத்திய ஒரே விடயம்- “எங்களுக்கு (அரசுகளுக்கு) வரையறைகள் உள்ளன. எம்மால் ஓரளவுக்குத்தான் வலியுறுத்த முடியும். உங்கள் விவகாரத்தை நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்“ என.
கடந்த ஓராண்டுக்கு முன்னதான காலப்பகுதியில் எந்த வெளிநாட்டு தரப்பும், தமிழர் தரப்பிடம் இப்படி வெளிப்படையாக கூறியதில்லை. ஆனால், தமிழர் தரப்பு அதிகம் நம்பியிருக்கும் இரண்டு வெளிநாட்டு சக்திகளுமே தமக்கு வரையறை உள்ளது என்பதை தெளிவாக குறிப்பிட்டு விட்டன.
இதன் அர்த்தம்- தொடர்ந்து “சர்வதேசத்துக்கு செய்தி சொல்ல“ பாணி அரசியலுக்கும் அப்பால் புத்திசாலித்தனமாக எதையாவது யோசித்து செயற்படுங்கள் என்பதே.
2000களின் தொடக்கத்தில் முதன்முதலாக வாக்களிக்க தொடங்கிய- வடக்கு கிழக்கை சேர்ந்த இளையவர்களில்… இதன் பின் வாக்களிக்க தொடங்கிய இளையவர்களில்- தமிழ் தேசிய கட்சிகளுக்கு வாக்களித்த அனைவருமே சில காரணங்களின் அடிப்படையிலேயே தமது வாக்கை பயன்படுத்தினர். அதில் முதன்மையானது- தமிழர்கள் ஒற்றுமையாக தமது செய்தியை சொல்ல வேண்டுமென்பதே.
இந்தக்காலப்பகுதியில் நடந்த ஜனாதிபதி தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தல்கள், உள்ளூராட்சி தேர்தல்கள் அனைத்திலுமே சர்வதேசத்துக்கு செய்தி சொல்லும் கோசமிருந்தது. சர்வதேசத்துக்கு செய்தி சொல்லவே மக்களும் வாக்களித்தனர்.
ஆனால், சர்வதேசத்துக்கு செய்தி சொல்ல வாக்களிக்க கோரிய தரப்புக்கள்- தமக்குரிய பொறுப்புணர்வை நிறைவேற்றினார்களா?
2000 களின் பின்னர் வாக்களித்தவர்கள் மட்டுமல்ல, இலங்கைத்தீவு சுதந்திரமடைந்த பின் நடந்த பெரும்பாலான தேர்தல்களில் தமிழ் மக்கள் கொள்கைக்காகவே வாக்களித்தனர். சர்வதேசத்துக்கு செய்தி சொல்ல வாக்களித்தவர்களும் கொள்கைக்காகவே வாக்களித்தனர்.
இலங்கை தமிழ் மக்களுக்காக 1944 இல் உருவான முதலாவது அரசியல் கட்சியான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியும், அதிலிருந்து 1949 இல் பிரிந்து உருவான இலங்கை தமிழ் அரசு கட்சியும், பின்னர் இவை இணைந்து 1972 இல் உருவான தமிழர் விடுதலை கூட்டணியும் தமிழ் மக்களின் அரசியல் உரிமையை வலியுறுத்தின. அதனால்தான் மக்கள் அவர்களை கேள்வியின்றி அமோகமாக ஆதரித்தார்கள்.
பின்னர், அந்த அரசியல் இயக்கத்தின் போதாமைகளினாலேயே இளைஞர்கள் விரக்தியடைந்து ஆயுத போராட்டத்தில் குதித்தனர்.
1976ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணி வட்டுக்கோட்டை பிரகடனத்தை மேற்கொண்டது. 1977 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில்- சுதந்திர தமிழீழத்துக்கான சர்வசன வாக்கெடுப்பு என அறிவித்தே தமிழர் விடுதலை கூட்டணி தேர்தலை சந்தித்தது. அதாவது, இன்றைய சர்வதேசத்துக்கு செய்தி சொல்லும் கோசத்தின் ஆரம்ப வெர்சன் இது. மக்கள் அமோகமாக வாக்களித்தனர்.
இதே தமிழர் விடுதலை கூட்டணி- 4 வருடங்களின் பின்னர் 1981 இல் மாவட்ட அபிவிருத்திசபை தேர்தலில் போட்டியிட்டது. இதன் பின்னரே, தமிழ் மிதவாத தலைவர்கள், தமிழ் இளைஞர்களாலேயே குறிவைக்கப்பட ஆரம்பித்தனர்.
முன்னதாக, பயங்கரவாத தடைச்சட்ட வரைபு சமர்ப்பிக்கப்பட்டபோது, அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியினர் அதை எதிர்க்காமல், பகிஸ்கரிக்கும் முடிவை எடுத்தனர்.
தாம் முன்வைக்கும் அரசியல் கோசங்களுக்கு அந்த தலைவர்கள் விசுவாசமாக இருக்கவில்லையென்ற விரக்திதான்- தமிழ் மிதவாதிகள் மக்கள் மத்தியிலிருந்து விலக்கப்பட்டதும், தமிழ் இளைஞர்கள் எழுச்சி பெற்றதும்.
விடுதலைப் புலிகளை மக்கள் அமோகமாக ஆதரித்ததும், அரசுகளுடன் இணைந்து செயற்பட்டவர்கள் சிறிய தரப்பாக இருந்ததும், இந்த காரணத்தினடிப்படையிலேயே. தாம் முன்வைத்த அரசியல் கோசத்துக்கு முழு விசுவாசமாக இருந்தார்கள் என்ற ஒரே காரணம்தான்- விடுதலைப் புலிகளின் எல்லாத் தவறுகளுடனும் அவர்களை மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டார்கள்.
யுத்தத்தின் பின்னர்- கடந்த 14 ஆண்டுகளில் தமிழ் தேசிய கட்சிகளில் எவ்வளவு தேய்வு ஏற்பட்டது என தனித்தனியாக கணக்கிடாமல்- தமிழ் தேசிய அரசியலில் எவ்வளவு தேய்வு ஏற்பட்டுள்ளது?… மக்கள் ஏன் அந்த அரசியல் தரப்புக்களை விடவும் வேறு தரப்புக்களையும் தெரிவு செய்ய ஆரம்பிக்கிறார்கள்? என்பதை நமது அரசியல் கட்சிகள் என்றாவது சுயவிமர்சனம் செய்துள்ளனவா?
அப்படியெதுவுமே நடக்கவில்லை.
அப்படியெதுவும் நடக்காததால் தான் இன்றும் பொது வேட்பாளர் பற்றி சிலர் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
யுத்தத்தின் பின்னர், தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பவர்களின் வாக்கு வங்கி சுருங்கிச் செல்வதற்கு ஒரே காரணம்- அவர்கள் தாங்கள் பேசும் அரசியலுக்கு விசுவாசமாக இருக்காததே. மிதவாத அரசியல் பேசுபவர்களின் இயலாமையினால் விரக்தியடைந்த இனம், ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்து, அதிலும் வெற்றியீட்ட முடியாமல் போன பின்னர், மீளவும் மிதவாத அரசியல் பேசுபவர்களில் நீண்டகாலம் நம்பிக்கை கொள்ளாது என்பதை புரிந்து கொள்ளலாம்.
மறுவளமாக, மிதவாத அரசியல் பேசுபவர்கள், தாம் பேசும் அரசியலுக்கு விசுவாசமாக செயற்பட்டார்களா?. அப்படி செயற்பட்டார்கள் எனில், தமிழ் தேசிய கட்சிகளுக்குள் ஏன் இத்தனை பிளவு?. தேர்தல் சமயங்களில் எதிர்தரப்பை விமர்சிப்பதை விட, மோதுவதை விட இந்த தரப்புக்கள் அல்லவா மோதிக் கொள்கிறார்கள். தமிழ் தேசிய கட்சிகளுக்குள் மோதிய காலம் போய், இப்பொழுது கட்சிகளுக்குள் உள்ள தலைவர்களின் அணிகள் மோதும் காலம் உருவாகி விட்டது. தமிழ் தேசியம் என்பது கட்சி அரசியலாக சுருங்கி, கட்சி பிரமுகர்களின் அரசியலாகி விட்டது. அந்த கட்சி, அந்த பிரமுகரை பிடித்தவர்கள் மட்டுமே வாக்களிக்கும் நிலைமை உருவாகியுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமிழ் தரப்புடன் இறுதியாக சந்தித்த இரண்டு தடவைகளிலும், தமிழ் அரசியல் கட்சிகளில் பல குழுக்கள் உள்ளதாகவும், யாருடன் பேசுவதென்ற குழப்பம் உள்ளதாகவும் ஓரளவு வெளிப்படையாகவே குறிப்பிட்டுள்ளார். இனப்பிரச்சினை விவகாரம் தற்போது அரசுக்கு கழுத்தை இறுக்கும் விவகாரமேயில்லை. அதாவது- இன்று களத்தில் உள்ள தமிழ் கட்சிகள் கடந்த 14 வருடங்களாக- சர்வதேசத்துக்கு செய்தி சொல்ல கேட்ட ஆணையை மக்கள் வழங்கினாலும், இன்றைய கள யதார்த்தம்- அரசு எந்த நெருக்கடியுமில்லாமல் களத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறது. இந்தளவில்தான் உள்ளது தமிழர் தரப்பின் இராஜதந்திரம்.
இந்த இலட்சணத்தில் மேலுமொருமுறை சர்வதேசத்துக்கு புதிதாக என்ன செய்தியை வெளிப்படுத்த தமிழர்களிடம் ஆணை கேட்கிறோம் என்பதை, பொதுவேட்பாளருக்கு கோரிக்கை விடுப்பவர்கள் வெளிப்படுத்த வேண்டும்.
அதேநேரம், இத்தனை வருடங்களாக தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கு சொன்ன செய்திகளை எப்படி பயன்படுத்தினோம்? அதனால் என்ன சாதித்தோம் என்பதையும் அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தி விட்டு, மீண்டும் மக்களிடம் ஆணை கேட்பதே முறை.
சர்வதேசத்திற்கு செய்தி சொல்லும் அரசியலே ஒரு கையாலாகத்தன அரசியலின் வெளிப்பாடு என்பதே யதார்த்தம். தமிழ் தேசிய அரசியலை முன்னெடுக்கும் தரப்புக்கள் எதையும் சாதிக்க முடியாத நிலைமையில், மக்களிற்கு மாய மான் அரசியல் காண்பிக்கும் விளையாட்டே சர்வதேசத்துக்கு செய்தி சொல்லும் சங்கதி.
உண்மையில், தமிழ் மக்கள் சர்வதேசத்துக்கு புதிதாக எந்த செய்தியையும் சொல்ல வேண்டியதில்லை. மாறாக, பொதுவேட்பாளர் கோசம் எழுப்புபவர்களே சர்வதேசத்துக்கும், தமிழ் மக்களுக்கும் சில செய்திகளை சொல்ல வேண்டும்.
பொதுவேட்பாளர் கோசம் எழுப்பும், கோசம் எழுப்பாத எல்லா தமிழ் தேசிய அரசியல் கட்சிகளும்- தாம் கட்சி அரசியலுக்கு அப்பால் இனத்துக்கான அரசியல் செய்கிறோம் என்பதை மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் நிரூபிக்க வேண்டும்.
இன்று களத்தில் உள்ள பிரதான தமிழ் தேசிய கட்சிகள் அனைத்துமே யுத்தத்தின் பின்னர் வந்த அரசுகளிடம் பின்கதவால் கைநனைத்தவர்கள்தான். யாருமே சுத்தமான சூசைப்பிள்ளைகள் கிடையாது. இந்த கைநனைத்தவர்கள் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது சாதாரண மக்களுக்கு தெரியும். ஒவ்வொரு ஜனாதிபதி தேர்தல்கள், பொதுத்தேர்தல்கள், ஆட்சி மாற்றங்கள், நம்பிக்கையில்லா பிரேரணைகள், வரவு செலவு திட்டங்களில் எதையெல்லாம் பரிமாறினார்கள் என்பதை இங்கு புதிதாக எழுத வேண்டியதில்லை.
ஒரு சுவாரஸ்ய உதாரணம்- சில வருடங்களின் முன்னர் அரசியல் குழப்பமொன்றின் போது, நாடாளுமன்றத்தில் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை. தீவிர தமிழ் தேசிய கட்சியொன்று ஒரேயொரு எம்.பியை கொண்டிருந்தது. கட்சித்தலைவர் எம்.பியல்ல. தான் யாருக்கு வாக்களிக்க வேண்டுமென தலைவர் டீல் போட்டு பணத்தை வாங்கி விட்டார் என அந்த எம்.பி தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பிக் கொண்டிருந்தார். இது சும்மா சாம்பிள்!
அதாவது, நமது அரசியல் கட்சிகள் எடுக்கும் முடிவுகள் எல்லாவற்றிற்கும் பின்னால் சொந்த கணக்கை நிரப்பும் டீல் உள்ளது என மக்கள் நினைக்கிறார்கள். அப்படியல்ல, நாங்கள் கொள்கைக்குன்றுகளே தவிர, பணப்பிசாசுகள் அல்லவென்பதை தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மக்களுக்கும், சர்வதேசத்துக்கும் செய்தி சொல்லி நிரூபிக்க வேண்டியதே நம் முன்னுள்ள முதற் கடமை.
இதுதவிர, தற்போது சிவில் அமைப்பென்ற பெயரில் இயங்கும் இருவர் பொது வேட்பாளர் என குத்தி முறிகிறார்கள். அவர்களில் ஒருவர் வர்த்தகர். சில வருடங்களில் கோடீஸ்வரரான வர்த்தகர். அவர் எப்படி டீல் செய்வார் என்பது அவரையறிந்த பலருக்கும் தெரியும். மஹிந்த ஆட்சிக்காலத்தில் இராணுவ உளவுத்துறைக்காக- உளவுத்துறையுடன் நெருக்கமாக செயற்பட்டவர். இன்னும் நிறைய சொல்லலாம். சில காலத்துக்கு முன்னர் வடக்கு ஆளுனர் நியமனம் நடந்த போது, அதை பெறுவதற்காக அரசுடன் நிறைய டீல் போட்டார். கிடைக்கவில்லை.
அந்த குழு அண்மையில் தமக்கு நெருக்கமான ஒருவருடனான தனிப்பட்ட உரையாடலில்- தாம் ரணில் விக்கிரமசிங்கவுக்காக செயற்படுவதாகவும், அந்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையிலேயே பொது வேட்பாளர் கோசத்தை முன்வைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இதை தவிர, பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுபவர்கள் சிலரும் பொது வேட்பாளர் தேவையென பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று தமிழ் பகுதிகளில் சிவில் அமைப்பு என செயற்படும், கட்டுரைகள் எழுதும் பெரும்பாலானவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள், தூதரகங்களில் பணம் பெறுபவர்களே. அவர்கள் யாருடைய கயிற்றை விழுங்கி, இங்கே கத்துகிறார்கள் என்பதது தெரியாது.
அதேபோல, உதிரியாக தமிழ் தேசிய பரப்பில் போராட்டங்களை முன்னெடுக்கும் சில குழுக்களும் புலம்பெயர் அமைப்புக்களால் போசிக்கப்படுபவர்களே.
ஆக, தமிழர் அரசியல், சிவில் பரப்பில் அனைவருமே கூலிப்படை அரசியல் செய்யும் ஆபத்தான காலமொன்றில், இந்த பொதுவேட்பாளர் கோசமும் ஆபத்தானது.
மக்களிடம் சர்வதேசத்துக்கான செய்தியை கோருவதற்கு முன்னர், இந்த அனைத்து தரப்பினருமே மக்களுக்கு ஒரு செய்தியை வெளிப்படுத்த வேண்டும். நாம் பணத்துக்காக யாருடையதோ கயிறுகளை விழுங்காமல், மக்களுக்காக செயற்படுகிறோம் என்பதை நிரூபிக்க வேண்டும். அதுவே இன்றைய அவசரத் தேவை.
இதேவேளை, பொதுவேட்பாளர் கோசமெழுப்புபவர்கள் எல்லோருமே டீல் காரர்கள் என்றுமல்ல. தமிழ் தேசிய அரசியல் கட்சிகளில்- குரலற்றவர்களாக உள்ள சிறிய தீவிர தமிழ் தேசியவாதிகளும் அதை கோருகிறார்கள்தான். அந்த சிறிய தரப்பினரின் சிந்தனை போக்குத்தான்- இந்த டீல் காரர்களுக்கும் வாய்ப்பாக அமைந்து விட்டது.
பொதுவேட்பாளர் என்பது ஒருவகை தற்கொலை அரசியலாகவே முடியும்.
கடந்த 14 வருடங்களில் மக்களில் வாக்களிக்கும் முறை, சிந்தனை, அரசியல் அதிருப்தி, தமிழ் தேசிய கட்சிகளின் பலவீனங்களை கணக்கிலெடுத்தே பொதுவேட்பாளர் பற்றி சந்திக்க வேண்டும். இதுதவிர, தமிழ் மக்கள் தேசிய தேர்தல்களில் தேசிய பார்வையுடனேயே வாக்களித்த வரலாறு உண்டு. ஜி.ஜி.பொன்னம்பலம் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட காலம் முதல் இதற்கு தெளிவான அரசியல் உதாரணங்கள் உள்ளன.
தமிழ் தேசிய கட்சிகள் எவ்வளவு சறுக்கிச் சென்றுள்ளனர் என்பதற்கு விஞ்ஞானபூர்வ முடிவுகளாக கடந்த பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி தேர்தல்கள் அமைந்துள்ளன. இன்று எந்த தமிழ் தேசிய கட்சியும் பொதுக்கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்தால், தன்னெழுச்சியாக 2000 பேர் கூட திரளமாட்டார்கள். கட்சிகளில் நம்பிக்கையில்லாத நிலையில், வாக்கை ஒரு ஆயுதமாக மக்கள் பயன்படுத்துகிறார்கள்.
2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை தமிழ் தேசிய மக்கள் முன்னணி பகிஸ்கரிக்க கோரியது. தமிழ் மக்கள் மிக அமோகமாக மைத்திரிக்கு வாக்களித்தனர். ஆனால் அடுத்த நான்கரை வருடத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு 2 நாடாளுமன்ற உறுப்புரிமை கிடைத்தது. இதன் அர்த்தம் என்னவென்றால், பாராளுமன்ற தேர்தலில் கஜேந்திரகுமாருக்கு வாக்களிக்கும் அனைவருமே, ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பதில்லை. அந்தந்த தேர்தலை அதற்குரிய பரிமாணங்களுடன் மக்கள் அணுகுவார்கள். அதை கச்சிதமாக கணக்கிட்டு காய்நகர்த்துபவர்களே வெற்றியடைகிறார்கள்.
தமிழ் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்பட்டால், அவர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிவாஜிலிங்கம் பெற்ற வாக்குகளை விட சில ஆயிரம் வாக்குகளை பெறக்கூடும். இதன்மூலம், தமிழ் மக்கள் அரசியல் தீர்வில் அக்கறையை கைவிட்டு விட்டார்கள், நாங்கள் இலங்கை விவகாரத்தை மூட்டை கட்டி வைக்கிறோம் என சர்வதேச சமூகம் கூறிவிட்டு போய்விடாது. தமிழ் பொதுவேட்பாளரால் யாரோ ஒரு சிங்கள வேட்பாளர் பலனடைய சிறிய வாய்ப்புள்ளது. குறிப்பாக, பெரமுனவின் ஆதரவுடன் களமிறங்கும் ரணிலுக்கு தமிழ் வாக்குகள் குறைவாக கிடைத்தால், ஏனைய வாக்குகள் சஜித்துக்கோ, அனுரவுக்கோ கிடைக்காமல் தடுக்க தமிழ் பொதுவேட்பாளர் உதவுவார்.
ஆனால், அதற்கான வாய்ப்பும் குறைவு. ஏனெனில், தமிழர்களின் ஹிஸ்டரி அப்படியல்லவே. அவர்கள் தேசிய தேர்தல்களில் தேசிய பார்வையுடனேயே வாகக்ளிப்பார்கள். இருப்பதில் சிறந்தவர் யார் என்பதை அவர்கள் தீர்மானிப்பார்கள்.



