தமிழில், ‘கேடி’ என்ற படம் மூலம் அறிமுகமான இலியானா, விஜய்யுடன் ‘நண்பன்’ படத்தில் நடித்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த இலியானா இப்போது இந்தியில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
இவர் வெளிநாட்டைச் சேர்ந்த மைக்கேல் டோலன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு கோவா பீனிக்ஸ் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், தனக்குத் தென்னிந்திய வாய்ப்புகள் குறைந்ததற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.
“இந்தியில் ‘பர்ஃபி’ படத்தில் நடிப்பதற்கு முன் தெலுங்கு, தமிழில் நடித்து வந்தேன். அந்த வாய்ப்பு வந்தபோது, அந்தக் கதையை விட்டுவிட மனசு வரவில்லை. அது வழக்கத்துக்கு மாறான சிறந்த கதையை கொண்ட படம். ‘பர்ஃபி’ வெளியான பிறகு, நான் இந்தியில் மட்டுமே கவனம் செலுத்த போகிறேன் என்ற தவறான எண்ணம் மற்ற மொழி இயக்குநர்களுக்கு ஏற்பட்டுவிட்டது. அதனால் தென்னிந்திய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்தியிலும் கதைகளைத் தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.