‘வின்னர்’ திரைப்படம் உருவானது குறித்தும், அதில் இடம்பெற்ற காட்சி குறித்தும் இயக்குநர் சுந்தர்.சி சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அரண்மனை 4’ படம் மே 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் புரமோஷனில் ஈடுபட்டு வரும் சுந்தர்.சி அண்மையில் கலந்துரையாடல் நிகழ்வு ஒன்றில் பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “தயாரிப்பாளர் ஒருவர் படம் பண்ணலாம் என அழைத்தார். அப்போது தெலுங்கில் ஹிட்டான படங்களை ‘ரீமேக்’ செய்யலாம் என முடிவெடுத்து நானும், சில தெலுங்கு படங்களை பார்த்தேன். அப்படி பார்த்துகொண்டிருக்கும், ஒரு படத்தில் என்னுடைய 3 படங்களை அப்படியே காப்பிடியத்து எடுத்திருந்தது தெரிந்தது.
என்னுடைய படங்களை உரிமம் வாங்காமல் ‘காப்பி’ அடித்து தெலுங்கில் படம் எடுத்துவிட்டார்கள் என்ற ஆதங்கம், வெறி என்னிடம் இருந்தது. அந்த இயக்குநர் மீது மட்டுமல்லாமல் மொத்த தெலுங்கு திரையுலகம் மீதும் ஆதங்கம் இருந்தது. தெலுங்கு திரையுலகை பழிவாங்க வேண்டும் என்று முடிவெடுத்து தெலுங்கு படங்களை காப்பிடியத்து படம் எடுக்கலாம் என ஆரம்பித்த ஸ்கிரிப்ட் தான் ‘வின்னர்’ திரைப்படம். ஆனால், அந்தப் பழிவாங்கலில் தோற்றது நான் தான்.
உதாரணமாக, ‘வின்னர்’ படத்தில் கதாநாயகி ஆபத்தில் இருப்பது போல் கத்தியவுடன், காப்பாற்ற நடிகர் பிரசாந்த் ஓடி வருவார். அப்போது குறுக்கே வடிவேலு ‘வந்துட்டேன்’ என கத்திகொண்டே ஓடி வந்து அந்த கோலிக் குண்டுகள் இருக்கும் மேட் மீது கால் வைத்து, ஒரு பந்து போல் அங்கும் இங்கும் அடிவாங்கி கீழே விழுவார். இந்தக் காட்சி தெலுங்கு படத்தில் இருந்து எடுத்து மாற்றி அமைக்கப்பட்டது.
இப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த பிறகு, சில நாட்கள் கழித்து நான் ஒரு தெலுங்கு படத்தின் காட்சியை பார்த்தேன். அந்த தெலுங்கு படத்தில் ‘வின்னர்’ படத்தில் வடிவேலு வழுக்கி விழும் காட்சியை அப்படியே காப்பியடித்து உருவாக்கியிருந்தனர். நானே தெலுங்கில் இருந்து தான் அந்தக் காட்சியை காப்பியடித்து சில மாற்றங்களுடன் படம் எடுத்து இருந்தேன். இது தெரியாமல் ‘வின்னர்’ படத்திலிருந்து அந்தக் காட்சியை காப்பியடித்து தெலுங்கில் ஒரு படத்தை எடுத்துள்ளனர். உங்கள் அளவுக்கு என்னால் படமெடுக்க முடியாது என நான் என் தோல்வியை ஒப்புக்கொண்டேன்” என்றார் கலகலப்பாக.