சிவனொளிபாத மலைக்கு யாத்திரை சென்ற நிலையில், கடந்த 19ஆம் திகதி உடமலுவ பகுதியிலிருந்து கீழே குதித்து காணாமல் போயிருந்த சூரியவெவ பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் ஹேமந்த என்ற இளைஞர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சிவனொளிபாத மலை வனப்பகுதிக்கு அருகில் உள்ள நல்லதன்னி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மரே தோட்டத்தின் ராஜமலை பகுதியில் நேற்று காலை இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். தோட்ட தொழிலாளர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் நல்லதண்ணி பொலிஸார் இளைஞனை மீட்டனர்.
இளைஞனின் உடலில் கீறல் காயங்கள் காணப்பட்டன. மலையிலிருந்து குதித்தது எதுவும் நினைவில் இல்லையென்றும், 3 நாட்களாக ஓடையில் நடந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
3 நாட்களாக உணவு உண்ணாததால் அவர் பலவீனமாக காணப்பட்டார். இளைஞன் சிகிச்சைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இராணுவத்தினரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து இளைஞரைத் தேடுவதற்காக 3 நாட்களாக விசேட நடவடிக்கையை மேற்கொண்டு பின்னர் அதனை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது