இன்று (23) காலை மொரகஹஹேன, மில்லவ சந்தி, புவக்வத்த பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலில் உயிரிழந்த இருவர் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
பல பாதாள உலக செயற்பாடுகளில் ஈடுபட்ட இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த இருவரில் ஒருவர் தனமல்வில, சூரியகம பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட “மாதேகொட சுத்தா” என அழைக்கப்படும் சூரஜ் பிரபோத மற்றும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மற்றைய நபர் இராணுவ சிறப்புப் படையில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
“மாதேகொட சுத்தா” என்பவர் “ரத்மலான கூடு அஞ்சு” என்பவரின் கட்டளைப்படி இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரத்மலானை பொருளாதார நிலையத்தில் ஒரு நபரை சுட்டுக் கொன்றார். கொலையின் பின்னர் இரகசியமாக வெளிநாடு சென்ற பாதாள உலக செயற்பாட்டாளரான “வலிஓயா பிரியந்த” குறித்த நபரின் நெருங்கிய உறவினர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலை, மெகொட பொலிஸார், பேருகட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வீதித்தடையை நிறுத்தி, போக்குவரத்துச் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, முச்சக்கர வண்டியை நிறுத்துமாறு கட்டளையிடப்பட்டபோது, முச்சக்கர வண்டியை நிறுத்தாமல், பொலிஸாரை நோக்கிச் சுட்டனர் .
பின்னர் தப்பியோடிய முச்சக்கரவண்டி தொடர்பில் மொரகஹஹேன பிரதேசத்திற்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தகவல் அனுப்பியதையடுத்து, மொரகஹஹேன நகரில் தங்கியிருந்த பொலிஸ் குழுவினர் செய்தியை கேட்டறிந்து வேகமாக வந்த முச்சக்கரவண்டியை நிறுத்துமாறு சைகை காட்டினர்.
முச்சக்கரவண்டி பொலிஸ் ஜீப் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர், முச்சக்கரவண்டியை ஜீப்பில் துரத்திச் சென்ற பொலிஸ் குழுவொன்று, புவக்வத்தை பகுதியில் வைத்து முச்சக்கரவண்டியின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அப்போது, அங்கிருந்த இருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில், முச்சக்கரவண்டியில் இருந்த மற்றுமொருவர் அருகில் உள்ள ரப்பர் தோட்டத்திற்கு ஓடியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரையும் பொலிஸ் ஜீப்பில் ஏற்றி ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன், அதற்குள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் மற்றும் ஹொரண ஆதார வைத்தியசாலைக்கு சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஹொரண நீதவான் சந்தன கலன்சூரிய நீதவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன், மொரகஹஹேன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.