லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் 171 வது படத்துக்கு ‘கூலி’ என தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான டைட்டில் அறிமுக வீடியோவையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
3.16 நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில், தங்க கட்டிகளையும், நகைகளையும், சிலைகளையும், தங்க வாட்ச்களையும் கொள்ளையர்கள் ஒன்று சேர்த்துக் கொண்டிருக்க, அவர்களிடம் ரஜினி உள்ளே வருவதாக தகவல் சொல்லப்படுகிறது. அடுத்து கதவின் இடையிலிருந்து ரஜினியின் கண்கள் தெரிகிறது. கூலிங் கிளாஸை மாட்டிக்கொண்டு, எதிரிகளை அடித்து துவம்சம் செய்தபடி உள்ளே வருகிறார். தங்க நகைகள் மட்டும் கலரிலும், மற்றவை ப்ளாக் அன்ட் வொயிட்டிலும் படமாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான ‘மாஸ்’ ஃபார்மெட்டில் உருவாகியிருக்கும் இந்த வீடியோவில் கவனிக்க வைப்பது ரஜினியின் ‘ரங்கா’ திரைப்படத்தின் வசனம். “அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள் தப்பெண்ண சரியேன்ன எப்போதும் விளையாடு, அடப்பாவி என்பார்கள் தப்பாக நினைக்காதே, எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே” என்ற வசனம் ஈர்ப்பு. சரத்குமார் நடிப்பில் வெளியான ‘கூலி’ படத்தின் தலைப்பு மீண்டும் இப்படத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.
‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170 வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினியின் 171 வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்தப் படத்தை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநர்களாக பணியாற்றுகின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.