இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் ஒருவர், தனது மனைவியுடன் கள்ளக்காதல் உறவை வைத்திருந்ததால், அவரை கொடூரமாக படுகொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் உயர் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டு 34 வருடங்களாக தலைமறைவாக இருந்த சந்தேகநபர் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
அவரை, ஏப்ரல் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதவான் திருமதி ராஜீந்திர ஜயசூரிய நேற்று (19) உத்தரவிட்டார்.
கலாநிதி வதுஆராச்சிகே அமரசிறி என்பவரே கொல்லப்பட்டார். அவரை அடித்துக் கொன்று, உடலைத் துண்டாக்கி மறைத்துள்ளார்.
பூகொட மந்தவில் பகுதியில் தலைமறைவாக இருந்த பிரதான குற்றவாளி பொலிசாரால் கைது செய்யப்பட்டார். அவருக்கு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
கொழும்பைச் சேர்ந்த நந்தன சுமனசேகர என்றழைக்கப்படும் சரத்சந்திர சுமணசேகர என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். அத்துடன், சந்தேக நபர் உயிரிழந்த நபரின் பிறப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி தேசிய அடையாள அட்டையை போலியாக தயாரித்து அதனைப் பயன்படுத்தியமையும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதான சந்தேகநபரின் மனைவியும் கடந்த பெப்ரவரி மாதம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் தீர்க்கப்படாத வழக்குகள் தொடர்பான பிரிவினரால் பண்டாரகம பிரதேசத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து, ஹோமாகம மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் மேன்முறையீடு வழக்கு நிலுவையில் இருந்ததால், அவரை சந்தேகநபராக சிறையில் அடைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
கொல்லப்பட்டவர் மின்சாரசபை பொறியியலாளராக கடமையாற்றியவர். அங்கு எழுத்தராக பணிபுரிந்த யுவதியுடன் அவருக்கு நெருக்கம் ஏற்பட்டது.
யுவதியை திருமணம் முடித்தவர், கள்ளக்காதல் விவகாரத்தை அறிந்து, மனைவியை தாக்கியுள்ளார். பின்னர், கணவரின் சொற்படி, பொறியியலாளரை தனது வீட்டுக்கு அழைத்தார். வீட்டில் யாருமில்லையென குறிப்பிட்டே அழைத்துள்ளார்.
அந்த வீட்டுக்கு வந்து கள்ளக்காதலியுடன் நெருக்கமாக இருக்க முற்பட்ட போது, மறைந்திருந்த கணவர் அவரை அடித்தும், வெட்டியும் கொலை செய்தார். இது 1989ஆம் ஆண்டு நடந்தது.
பின்னர் அவரது உடலை துண்டாடி, கொள்கலனில் மறைத்து வைத்தனர்.
இந்த சம்பவம் பற்றிய முழுமையான தகவல்களை வாசிக்க| கொலையில் முடிந்த கள்ளக்காதல்: 33 வருடங்களின் முன் கள்ளக்காதலனை படுக்கைக்கு அழைத்து தலைமறைவாக இருந்த பெண் கைது!
வழக்கு விசாரணையின் போது, சந்தேகநபர்கள் நீதிமன்றில் முன்னிலையாகாத காரணத்தினால், குறித்த வழக்கு, குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்றி உயர்நீதிமன்றத்தினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, 2019ஆம் ஆண்டு சந்தேக நபர்கள் இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு போலியான தேசிய அடையாள அட்டையை தயாரிக்க உதவியவர்களைக் கண்டறிய விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.




